ஆ. ஆனந்தகுமார்
ஆ. ஆனந்தகுமார் (பிறப்பு: 1932) சென்னையை சேர்ந்த சித்த மருத்துவ நிபுணர் ஆவார்.[1]
வாழ்க்கையும், கல்வியும்
இவரது தந்தை பண்டிதர் எஸ். எஸ். ஆனந்தமும் சித்த மருத்துவர். பரம்பரையாகச் சித்த மருத்துவக் குடும்பம். நான்கரை வயதுவரை வீட்டிலேயே படித்தார். தியாகராய நகர் (வடக்குக் கிளை) பள்ளியில் 5ஆம் வகுப்பிலிருந்துதான் பள்ளிப் படிப்பு தொடங்கியது. பச்சையப்பன் கல்லூரியில் இண்டர்மீடியட் படிப்பு. பச்சையப்பன் கல்லூரியில் தமிழறிஞர் மு. வரதராசன், க. அன்பழகன், அன்பு கணபதி ஆகியோர் இவரது தமிழாசிரியர்கள். வீட்டில் இவரது தந்தையே தமிழ் ஆசிரியர். இண்டர்மீடியட் படிப்பில் மாநிலத்தில் முதலிடம் பெற்றார். சித்த மருத்துவத்தில் ஊறிய தந்தைக்குத் தெரியாமல் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு மனுச் செய்தார். தந்தை வலியுறுத்தியதால் அலோபதி-சித்தம்-ஆயுர்வேதம்-யுனானி ஆகியவை ஒருங்கினைந்த 5 ஆண்டு பட்டப் படிப்பில் (G.C.I.M.-Graduate of the college of integrated medicine) சேர்ந்தார். கல்லூரி மாணவராக இருந்தபோது, சித்த மருத்துவம் படிப்பவர்களுக்கு ஆங்கில மருத்துவ அறிவும் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து, குரல் கொடுத்து, ஆங்கில மருத்துவக் கற்பிக்கும் நேரத்தை அதிகரிக்கச் செய்தார்.
பணிகள்
தோல் நோய்களில் கொடிய சோரியாசிஸ் நோய்குறித்து சித்த மருத்துவ முறையில் ஆய்வு செய்து சிகிச்சை அளித்துவந்தார். இந்திய மருத்துவ இதழ்களில் இவரது ஆய்வு அறிக்கைகள் வெளியாகியுள்ளன. 1992இல் மலேசியாவில் நடந்த சித்த மருத்துவ மாநாட்டின் செயலாளராக இருந்தார். திருவான்மியூரில் உள்ள 'இம்ப்காப்ஸ்' (இந்திய முறை) மருத்துவமனையின் இயக்குநராக 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தார். தாம்பரம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் எயிட்ஸ் நோயாளிகளுக்குச் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து வந்தார். மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவத் தயாரிப்புக் கூடத்தை 3 இலட்சம் ரூபாய் செலவில் கட்டினார். எயிட்ஸ் நோயாளிகளுக்கு உணவுச் செலவுக்கு ரூபாய் 20 இலட்சத்துக்குமேல் நன்கொடையாக வழங்கினார்.[2]