ஆர். நடராஜ முதலியார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆர். நடராஜ முதலியார்
ஆர். நடராஜ முதலியார்
இயற்பெயர்/
அறியும் பெயர்
ரங்கசுவாமி நடராஜ முதலியார்
பிறந்ததிகதி 1885
பிறந்தஇடம் வேலூர், சென்னை மாகாணம், இந்தியா
இறப்பு மே 3, 1971 (அகவை 85–86)
பணி திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர், ஒளிப்பதிவாளர்
அறியப்படுவது தென்னிந்தியாவில் முதல் திரைப்படத்தைத் தயாரித்தவர்

ரங்கசுவாமி நடராஜ முதலியார் (Rangaswamy Nataraja Mudaliar, 1885 – மே 3, 1971) தமிழகத் திரைப்படத்துறையின் தந்தை என அறியப்படுபவரும்,[1] ஊமைத் திரைப்படங்களைத் தயாரிப்பதில் முன்னோடியாகவும் இருந்தவர். தென்னிந்தியாவின் முதலாவது ஊமைப்படமான கீசக வதம் திரைப்படத்தை 1917 இல் தயாரித்து, இயக்கி வெளியிட்டார். தொடர்ந்து திரௌபதி வஸ்திராபகரணம் (1918), லவ குசா (1919), ருக்மணி சத்யபாமா, மயில் ராவணா ஆகிய ஒலியில்லாத் திரைப்படங்களைத் தனது "இந்தியா பிலிம் கம்பனி" என்ற நிறுவனத்தினூடாகத் தயாரித்து வெளியிட்டார்.[2]

ஆரம்ப வாழ்க்கை

நடராஜ முதலியார் சென்னை மாகாணம், வேலூரில் ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார்.[3] இவரது தந்தை வணிகத் தொழிலில் வெற்றிகரமாக ஈடுபட்டு வந்தவர். நடராஜ முதலியார் பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு தனது வணிகத் தொழிலை விருத்தி செய்யும் முகமாக சென்னை வந்தார்.[3] வாட்சன் அன்ட் கம்பனி என்ற பெயரில் தனது உறவினர் எஸ். எம். தர்மலிங்கம் முதலியார் என்வருடன் இணைந்து வெளிநாடுகளில் இருந்து மிதிவண்டிகளை இறக்குமதி செய்து விற்று வந்தார்.[3] பின்னர் 1911 இல் "ரோமார் டான்" என்ற வெளிநாட்டு நிறுவனம் ஒன்றை வாங்கி அதன் மூலம் அமெரிக்க வாகனங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்தார்.[3] நடராஜ முதலியார் ஒளிப்படவியலிலும் ஆர்வம் காட்டினார். இதுவே அவர் பின்னர் அசையும் படத் தொழிலில் ஈடுபட வைத்தது.[3]

திரைப்படத் துறையில்

தாதாசாகெப் பால்கேயின் திரைப்படங்களைப் பார்த்து அதன் மூலம் அசையும் திரைப்படங்கள் மீது ஆர்வம் காட்டினார் நடராஜ முதலியார். அப்போதைய ஆளுநராகவும், வைசிராயாகவும் பணியாற்றிய கர்சன் பிரபு குறித்த வர்ணனைத் திரைப்படம் ஒன்றை பிரித்தானியத் திரைப்படத்துறையினர் தயாரித்து வந்தனர்.[3] அவர்களில் ஸ்டுவர்ட் சிமித் என்னும் ஒளிப்பதிவாளருடன் முதலியாருக்கு அறிமுகம் கிடைத்தது. அவரிடம் இருத்து திரைப்படங்கள் பற்றிய நுணுக்கங்களை அறிந்து கொண்டார்.[3] திரைப்படத் தொழிலில் ஆர்வம் ஏற்பட்டதன் விளைவாக தனது கம்பனியை சென்னை சிம்சன் கம்பனிக்கு விற்று விட்டு,[4] 1917 ஆம் ஆன்டில் "இந்தியா பிலிம் கம்பனி" என்ற பெயரில் சொந்தக் கம்பனி ஒன்றை ஆரம்பித்தார்.[3][5] சென்னை புரசைவாக்கம், மில்லர்சு சாலையில் தென்ன்னிந்தியாவின் முதலாவது கலையகத்தை அமைத்தார்.[5]

1917 இல் கீசக வதம் என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். இதன் ஒளிப்பதிவு, இயக்கம், தொகுப்பு போன்ற பொறுப்புகளிலும் அவரே பணியாற்றினார். 6,000 அடிகளுக்கும் மேல் நீளமுள்ள இத்திரைப்படமே தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது திரைப்படமாகும்.[6][7] இத்திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது.[7] இத்திரைப்படத்தின் குறிப்புகளை மருத்துவர் குருசுவாமி முதலியாரும், திருவேங்கட முதலியாரும் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதினர்.[7] இந்தி மொழிக் குறிப்புகளை தேவதாஸ் காந்தி எழுதினார்.[7] கீசகவதம் திரைப்படம் 1918 ஆம் ஆண்டு துவக்கத்தில் சென்னையில் எல்பின்ஸ்டன் திரையரங்கில் வெளியானது. இத்திரைப்படத்தின் வெற்றியை அடுத்து, மேலும் சில திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டார்.

1923 ஆம் ஆண்டு முதலியாரின் திரைப்படக் கலையகம் தீக்கிரையானது.[4] அதே ஆண்டு அவருடைய மகனும் இறந்தார். பின்னர் முதலீட்டாளர்களின் ஆதரவு கிடைக்காததாலும், திரைப்படத் தொழிலை விட்டு விலகினார்[7]

இறுதிக் காலம்

1970 ஆம் ஆண்டில் அன்றைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி தலைமையில் சென்னை ராஜாஜி மண்டபத்தில் இடம்பெற்ற பாராட்டு விழாவில், முதலியாரின் சாதனைகளைப் பாராட்டி வெள்ளிப் பதக்கம் பரிசளித்தனர்.[4]

தனது இறுதிக் காலத்தை சென்னை அயனாவரத்தில் தம் மகள் ராதாபாயுடன் கழித்தார். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு சென்னை பொது மருத்துவமனையில் 1971 மே 2-ம் தேதி நள்ளிரவு 12.50 மணிக்குக் காலமானார்.[4]

திரைப்படங்கள்

மேற்கோள்கள்

  1. "Classics must be preserved, says B. Mahendra". தி டெக்கன் குரோனிக்கள். 29 மே 2013 இம் மூலத்தில் இருந்து 28 அக்டோபர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151028022043/http://archives.deccanchronicle.com/130529/entertainment-kollywood/article/classics-must-be-preserved-says-b-mahendra. பார்த்த நாள்: 5 June 2013. 
  2. Selvaraj Velayutham (3 ஏப்ரல் 2008). Tamil Cinema: The Cultural Politics of India's other Film Industry. Taylor & Francis. பக். 2–3. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-203-93037-3. https://books.google.com/books?id=kuPaE3v22zAC. பார்த்த நாள்: 5 சூன் 2013. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 Guy, Randor (9 மே 2002). "Remembering a pioneer". தி இந்து இம் மூலத்தில் இருந்து 1 ஜூலை 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030701044553/http://www.hindu.com/thehindu/mp/2002/05/09/stories/2002050900170300.htm. பார்த்த நாள்: 5 June 2013. 
  4. 4.0 4.1 4.2 4.3 "Tamil cinema pioneers: R.Natarja mudaliyar, first tamil producer of silence film in south india - தமிழ் சினிமா முன்னோடிகள் (4): ஆர். நடராஜ முதலியார்". www.vikatan.com இம் மூலத்தில் இருந்து 2016-01-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160110101241/http://www.vikatan.com/news/coverstory/50790.art. பார்த்த நாள்: 30 அக்டோபர் 2016. 
  5. 5.0 5.1 Edited By Jerry Pinto & Rahul Srivastava (2008). Talk of the Town. Penguin Books India. பக். 42–43. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-14-333013-4. https://books.google.com/books?id=Az1XFhjzmUwC. பார்த்த நாள்: 5 June 2013. 
  6. Samuel Cameron (1 சனவரி 2011). Handbook on the Economics of Leisure. Edward Elgar Publishing. பக். 302. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85793-056-9. https://books.google.com/books?id=gWuMYKzvnOEC. பார்த்த நாள்: 5 June 2013. 
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 "The stamp of honour". தி இந்து. 10 சூலை 2000 இம் மூலத்தில் இருந்து 2012-11-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121111030210/http://hindu.com/2000/07/10/stories/09100224.htm. பார்த்த நாள்: 5 சூன் 2013. 
"https://tamilar.wiki/index.php?title=ஆர்._நடராஜ_முதலியார்&oldid=20789" இருந்து மீள்விக்கப்பட்டது