ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண் அத்தனார்
ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண் அத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடலாக ஒன்றே ஒன்று சங்கப்பாடல்களில் (அகநானூறு 64 முல்லை) காணப்படுகிறது.
புலவர் பெயர் பற்றிய விளக்கம்
அத்தன் என்பது புலவர் பெயர். தமிழ்மக்கள் பொதுவாகக் கருமையான விழியை உடையவர்கள். இப்புலவரது விழி சற்று வெண்மையாக இருந்ததால் இவரை வெள்ளைக்கண் அத்தனார் என்றனர். இக்காலத்தில் வெள்ளைக் கண்ணைப் பூனைக்கண் என்பர். பிற அடைமொழிகள் தெளிவானவை.
பாடல் தரும் செய்தி
வினைமுற்றி மீளும் தலைமகன் தன் தேர்ப்பாகனிடம் சொல்கிறான். மாலையில் ஆனிரைகள் மீளும்போது அவற்றின் மணியொலி கேட்டு நம் தேரின் குதிரை மணியொலியோ எனக் கலங்கும் என்னவளின் துன்பம் களையும் நேரம் வந்துவிட்டது. வள்பு என்னும் சாட்டையால் குதிரையை முடுக்கி ஓட்டுக.
ஆபூண் தெண்மணி
காளை தன் காலால் மணலைப் பறித்துச் சிதறும். கொம்பால் புற்றுமண்ணைக் குத்தித் தூக்கும். பின் தன் வேட்கையை வெளிப்படுத்திக்கொண்டு பசுவைத் தழுவிக்கொண்டு நடக்கும். பசு தன் கன்றை நினைத்துக் கனைத்துக்கொண்டு தன் மன்றத்தை நோக்கி ஓடும். அப்போது பசுக்களின் கழுத்தில் கட்டியிருக்கம் தெண்தெண் என்று ஒலி கேட்கும் தெண்மணி ஒலிக்கும்.
தோர்செல்லும் வழி
தளவம் பூக்கள் பூத்திருக்கும். ஈரப்பதமாக மண் இருக்கும். (காரணம், அது கார்காலம்) கூர்மையான, இலைபோல் அகன்ற, எண்ணெய் பூசப்பட்ட மினுமினுப்புடைய வேலினை உடைய இளையர் நம் பக்கத்தில் ஓடிவந்து குதிரையை மேலும் முடுக்குவர்.