வேலுடையான்பட்டு சிவசுப்பிரமணியர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வேலுடையான்பட்டு சிவசுப்பிரமணியர் கோயில் தமிழ்நாடு, கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், நெய்வேலி நகரியத்தில் வேலுடையான்பட்டு என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஒரு முருகன் கோயில் ஆகும். இக்கோயில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் சித்திர காடவ பல்லவ வம்சத்து அரசரால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.[சான்று தேவை]

1935 இல் வேலுடையான்பட்டு

கி.பி.1935 வரை வேலுடையான்பட்டு கிராமம் மற்றும் அதைச் சுற்றியிருந்த கிராமங்கள் செழிப்புடன் இருந்தன. 1935 ல் ஜம்புலிங்க முதலியார் என்பவர் தன் நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டினார். கிணற்றில் கருமையான நிறத்தில் பொருள் வெளிப்பட்டது. அவர் அதனை அரசுக்கு அனுப்பி வைத்தார். அதை ஆராய்ந்தபோது அது நிலக்கரி என கண்டனர். அதன் பிறகு அந்த கிராமங்களைச் சுற்றிலும் உள்ள நிலங்களை ஆய்வு செய்து பூமிக்கு அடியில் படிந்திருக்கும். நிலக்கரியின் அளவை கணக்கிட்டனர். பின்னர், நிலக்கரியைத் தோண்டி எடுத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தீட்டியது.

கி.பி.1956 ஆம் ஆண்டு சுரங்கம் தோண்ட நிர்வாக (corporate Body) அமைப்பு ஒன்றை நடுவணரசு அமைத்தது. கிராமங்களைக் காலி செய்து மக்களை வேறு இடங்களில் குடியமர்த்தியது. காலி செய்யப்பட்ட கிராமங்களுள் வேலுடையான் பட்டு என்ற ஊரும் ஒன்று. ஊரைக் காலி செய்தாலும் மக்களால் வழிபாடு செய்யப்பட்டு வந்த சுப்பிரமணியர் கோயில் மட்டும் நிலைத்திருக்கிறது.

வேலும் வில்லும்

முருகன் அசுரர்களை தன் தாயார் கொடுத்த வேலை கொண்டு வதம் செய்தார் என கந்த புராணம் கூறுகிறது. அதனால் முருகன் கோயில்களில் முருகன் கையில் வேலுடன் காட்சியளிப்பார். ஆனால் வேலுடையான்பட்டு கோயிலில் முருகன் கையில் வில்லுடன் காட்சி அளிக்கிறார். வருவாய்துறை ஆவணங்களிலும் வேலுடையான்பட்டு என்றே உள்ளது. என். எல். சி. நிர்வாகத்தின் கீழ் இக்கோயில் தற்பொழுது உள்ளதால் கோயிலின் பெயரை வில்லுடையான் பட்டி சுப்பிரமணியர் கோயில் என பெயர் பலகை வைத்தனர். ஆனாலும் வேலுடையான் பட்டு என்ற பெயரே நிலைத்துள்ளது.[1] ’’பட்டி’’ என முடியும் ஊர்கள் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மட்டுமே காணப்படுகிறது. வட மாவட்டங்களில் ‘’பட்டு’’ என முடியும் ஊர்களே காணப்படுகின்றன. மாம்பபட்டு, அத்திபட்டு, மாளிகம்பட்டு, கோரணபட்டு போன்ற கிராமங்கள் வேலுடையான்பட்டு கிராமத்தைச் சுற்றி காணப்படுகின்றன.

பங்குனி உத்திரம்

பங்குனி மாதம் வளர்பிறை கார்த்திகை நட்சத்திரத்தில் இங்கு கொடியேற்றம். நடைபெறும். தொடர்ந்து பத்து நாட்கள் உற்சவம் நடைபெறும். தெருவடைச்சான் சப்பரம், முத்து இந்திர விமானத்தில் வீதி உலா, திருக் கல்யாணம், திருத்தேர் வடம் பிடித்தல், உத்திர நட்சத்திரத்தில் காவடி எடுத்தல், பின் தெப்ப உற்சவம் இறுதியில் விடையாற்றி உற்சவம் ஆகியவை நடைபெறும்.

மேற்கோள்கள்

  1. "வேலுடையான்பட்டு சிவசுப்ரமணியர் கோயில்". தினமணி. 2 ஏப்ரல் 2014.

வெளி இணைப்புகள்