வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 9°57′53″N 77°26′07″E / 9.9648°N 77.4354°ECoordinates: 9°57′53″N 77°26′07″E / 9.9648°N 77.4354°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தேனி |
அமைவிடம்: | வீரபாண்டி |
சட்டமன்றத் தொகுதி: | போடிநாயக்கனூர் |
மக்களவைத் தொகுதி: | தேனி |
ஏற்றம்: | 356 m (1,168 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | கௌமாரியம்மன் |
சிறப்புத் திருவிழாக்கள்: | சித்திரைத் திருவிழா, வைகாசி விசாகம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை, தைப்பொங்கல், பங்குனி உத்திரம் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
கௌமாரியம்மன் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டி எனும் ஊரில் அமைந்துள்ள ஓர் அம்மன் கோயில் ஆகும். தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் கோயில் மாரியம்மனுக்கான பல கோயில்களில் ஒன்றாகும்.
தல வரலாறு
வைகை நதியின் கரையின் அடர்ந்த காட்டுப் பகுதியில் அசுரன் ஒருவனை வெல்வதற்காக சக்திதேவியின் அம்சமான கௌமாரி ஒரு சிவலிங்கம் செய்து அதன்முன் தவமிருந்து வந்தார். இதையறிந்த அசுரன் கௌமாரியைத் தூக்கிச் செல்ல முயன்றான். இதைத் தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்த கௌமாரி அருகிலிருந்த அருகம்புல்லை எடுத்து அவனை நோக்கி வீசினாள். அந்த அருகம்புல் முக்கழுப்படையாக உருவெடுத்து அசுரனை இரண்டாகப் பிளந்து கொன்றது. இதைப் பார்த்த தேவர்கள் வானிலிருந்து மலர்களைத் தூவினர். அவள் பூஜித்து வந்த சிவலிங்கத்திற்கு "திருக்கண்ணீசுவரர்" எனப் பெயரிட்டாள்.
மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டிய நாட்டின் மன்னன் வீரபாண்டியன் தனது ஊழ்வினைகளால் இரண்டு கண்களின் பார்வையை இழந்தான். தனக்கு கண் பார்வை வேண்டி பல கோயில்களுக்குச் சென்றான். ஒரு நாள் அவனது கனவில் தோன்றிய சிவபெருமான் வீரபாண்டியில் தவமிருக்கும் கௌமாரியம்மனை வணங்கி அதன்பிறகு கண்ணீசுவரமுடையார் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கண் பார்வை கிடைக்கும் என்று சொன்னார். அதன்படி அந்த மன்னனும் இந்தப் பகுதிக்கு வந்து கௌமாரியை வணங்கி ஒரு கண்ணின் பார்வையும், கண்ணீசுவரமுடையாரை வணங்கி மற்றொரு கண்ணின் பார்வையையும் பெற்றான். அதன் பின்பு கண்ணீசுவரமுடையாருக்கு கற்கோயிலும், கௌமாரியம்மனுக்கு சிறிய கோயில் ஒன்றையும் அமைத்து வழிபாடு செய்தான்.
வழிபாடுகள்
இந்து சமயக் கோயிலில்கள் அனைத்திலும் செய்யப்படும் தினசரி பூசைகள் இந்தக் கோயிலிலும் செய்யப்படுகின்றன.
இந்தக் கோயிலில் தை மாதச் சங்கராந்தி, தைப்பூசம், மாசி மாத மகா சிவராத்திரி, பங்குனி மாத உத்திரம், சித்திரை மாதப் பிறப்பு, வைகாசி மாத விசாகம், ஆடி மாத அமாவாசை, ஆவணி மாத விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி மாத நவராத்திரி திருவிழா, ஐப்பசி மாத தீபாவளி, கார்த்திகை மாத கார்த்திகை விழா, மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி போன்ற நாட்களில் சிறப்புப் பூசைகள் செய்யப்படுகின்றன.
இந்தக் கோயிலில் சித்திரை மாதக் கடைசி செவ்வாய்க் கிழமை துவங்கி வைகாசி மாத முதல் செவ்வாய்க் கிழமை வரையிலான எட்டு நாட்கள் சிறப்பு சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது.
சித்திரைத் திருவிழா
இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் போது மட்டும் 24 மணி நேரமும் கோயிலில் வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த அம்மனிடம் நேர்த்திக் கடனாக வேண்டிக் கொண்டவர்கள் அக்கினிச் சட்டி எடுத்து காணிக்கை செலுத்துகின்றனர். சிலர் நாக்கில் அலகு குத்துதல் எனும் சிறிய வேலைக் குத்திக் கொண்டு அக்கினிச் சட்டி எடுக்கின்றனர். சிலர் ஆயிரம் கண் பானை எடுத்து காணிக்கையாகச் செலுத்துகின்றனர். சிலர் உடல் முழுவதும் முல்லை ஆற்றின் கரையில் உள்ள சேற்றைப் பூசிக் கொண்டு கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்கின்றனர். சித்திரைத் திருவிழாவின் போது அனைத்துப் பக்தர்களும் முல்லை ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்துச் சென்று அம்மன் கோயிலில் இருக்கும் முக்கொம்புவிற்கு ஊற்றிவிட்டு அதன்பிறகு அம்மனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கோயிலுக்கு நேர்த்திக் கடனாக ஆடு, கோழி போன்றவை பலியிட்டு அசைவ உணவு அன்னதானம் செய்யும் வழக்கம் கடைப்பிடிக்கப் படுகிறது. (பொதுவாக மாரியம்மன் கோயில்களில் ஆடு, கோழி பலியிடப்படுவதில்லை என்றாலும் இந்த அம்மனை அசைவ உணவு உண்பவர்கள்தான் அதிகமாக வணங்கி வருகின்றனர் என்பதால் இந்த வழக்கம் காவல் தெய்வமாக இருக்கும் கருப்பசாமியின் பெயரில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் பலரும் மாரியம்மனுக்குத்தான் பலியிடும் வழக்கத்தை நேர்த்திக்கடனாக செய்து வருகின்றனர்.)
சித்திரைத் திருவிழாவின் போது அம்மன் அன்ன வாகனம், சிம்ம வாகனம், காமதேனு வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம் போன்றவற்றில் பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார். சித்திரைத் திருவிழாவில் வெள்ளிக் கிழமையன்று பூவால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் ஊர்வலமாகக் கொண்டு வரப்படுகிறார். அன்று இதைக் காண அதிக அளவில் மக்கள் கூடுகிறார்கள்.
சித்திரைத் திருவிழாவின் போது பொழுது போக்கிற்காக ராட்டினங்கள், சர்க்கஸ் மற்றும் பல வேடிக்கை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவை 24 மணி நேரமும் நடந்து கொண்டிருக்கிறது. கோயிலுக்கு வரும் இந்தப் பகுதி மக்கள் வாங்கிச் செல்வதற்காக குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள், ஆடை அணிகலன்கள், வீட்டிற்குத் தேவையான பொருட்கள் என்று பல வகையான வணிகக் கடைகள் தற்காலிகமாக அமைக்கப்படுகிறது.
தேனி மாவட்டத்தில் நடைபெறும் முக்கியமான திருவிழா இந்தத் திருவிழா ஒன்று மட்டும்தான். இந்தத் திருவிழாவிற்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தென் மாவட்டங்கள் அனைத்திலும் இருந்து மக்கள் வந்து செல்கிறார்கள். இதற்காக தமிழ்நாடு அரசால் தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சிறப்புகள்
- பாண்டிய மன்னனுக்குக் கண் பார்வை தந்த இந்தக் கோயிலில் வணங்கிச் செல்பவர்களுக்கு அம்மை மற்றும் கோடைக்கால அனைத்து வெப்ப நோய்களும் நீங்கி விடும் என்கின்றனர்.
- கோயிலின் தீர்த்தமாக கோயிலுக்கு அருகே ஓடும் முல்லை நதியின் நீர் பயன்படுத்தப்படுகிறது.
- கோயில் குறித்த தகவல்கள் சின்னமனூர் அரிகேசரி நல்லூர் தல புராணத்தில் பதினான்காம் படலத்தில் இடம் பெற்றிருக்கிறது.
- கோயில் கோபுரத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகிகளான மகாத்மா காந்தி, கஸ்தூரிபா காந்தி, ஜவஹர்லால் நேரு, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோரது உருவச் சிலைகள் இடம் பெற்றுள்ளன.
துணைக் கோயில்கள்
கௌமாரியம்மன் கோயில் வீரபாண்டி கண்ணீசுவரமுடையார் கோயில் க்குத் துணைக் கோயிலாக இருக்கிறது. இந்த இரு கோயில்களின் துணைக் கோயிலாக வீரபாண்டி செல்லாண்டியம்மன் கோயில் இருக்கிறது.
காட்சியகம்
- வீரபாண்டி தேர்.jpg
வீரபாண்டி தேர்
- வீரபாண்டி பெரிய ராட்டினங்கள்.jpg
இராட்டினம்
- புல்லாங்குழல் விற்பவர்.jpg
புல்லாங்குழல்கள்
- வீரபாண்டி கௌமாரியம்மன்.jpg
கௌமாரியம்மன்
- விளையாட்டுப் பொருள்கள்.jpg
விளை.பொருள்கள்
- பஞ்சு முட்டாய்.jpg
- Full view of Veerapandi river.jpg
வீரபாண்டி ஆறு
பயண வசதி
தேனியிலிருந்து கம்பம்,குமுளிசெல்லும் சாலையில் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் வீரபாண்டிக்கு இந்த வழியே செல்லும் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்கின்றன.
வெளி இணைப்புகள்
- பொதுவகத்தில் கோயில் திருவிழா தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- முத்துக்கமலம் இணைய இதழில் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில்