மயிலாடுதுறை ஆதி வைத்தீசுவரர் கோயில்
மயிலாடுதுறை ஆதி வைத்தீசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
இக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறையில் அமைந்துள்ளது.[1]
இறைவன், இறைவி
இக்கோயிலின் மூலவராக ஆதி வைத்தீசுவரர் உள்ளார். இங்குள்ள இறைவி தையல்நாயகி ஆவார். இக்கோயிலின் தீர்த்தம் மண்ணியாறு ஆகும். தம் பெற்றோரான ஈசனும், இறைவியும் நீராடுவதற்காக முருகப்பெருமான் தன்னுடைய வேலைத் தூக்கி எறிந்து உருவாக்கியதே சுப்பிரமணியர் நதி எனப்பட்டது. தற்போது இதன் பெயர் மண்ணியாறு ஆகும். கோயிலின் தென் புறத்தில் வற்றாத நதியாக இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் பெருமையுடையது.[1]
அமைப்பு
கோயிலில் நுழைந்ததும் மண்டபம் காணப்படுகிறது. அடுத்து பலிபீடங்கள் உள்ளன. மண்டபத்தில் இடது புறம் தையல்நாயகி சன்னதி காணப்படுகிறது. மூலவர் சன்னதிக்கு முன்பாக அர்த்த மண்டபத்தின் நுழைவாயிலில் விநாயகர் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், மகாலட்சுமி, பைரவர், சூரியன் ஆகியோர் உள்ளனர். சண்டிகேஸ்வரர், சனீசுவரர் ஆகியோருக்கு தனித்தனியாக சன்னதிகள் உள்ளன. [1]
திருவிழாக்கள்
மாதக்கார்த்திகை, திருவாதிரை, பிரதோஷம், சித்திரை மாதப் பிறப்பு, தீபாவளி, பொங்கல், கார்த்திகை போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன.[1]