பேட்டவாய்த்தலை மத்யார்ஜுனேஸ்வரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
படிமம்:பேட்டவாய்த்தலை மத்யார்ஜுனேஸ்வரர் கோயில்.jpg
பேட்டவாய்த்தலை மத்யார்ஜுனேஸ்வரர் கோயில்

பெட்டவாய்த்தலை மத்யார்ஜுனேஸ்வரர் கோயில் திருச்சி மாவட்டத்திலுள்ள பேட்டவாய்த்தலை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவாலயம் ஆகும்.[1]. இச்சிவாலயத்தினை மூன்றாம் குலோத்துங்கன் எனும் சோழ மன்னன் கட்டியுள்ளார். பொற்றாள பூவாய் சித்தர் எனும் சித்தர் இச்சிவாலயத்தில் பாலம்பிகையின் அருளால் பெண்களுக்கான நோய்களைத் தீர்த்து வந்தார். தற்போது அவருடைய சிற்பம் உள்ள தூணுக்கு அருகே சீட்டு எழுதி கட்டும் வழக்கம் உள்ளது.

அமைவிடம்

  • இத்திருத்தலமானது திருச்சிக்கு மேற்கு திசையில் 25 கி.மீ தொலைவில் திருச்சிகரூர் தேசிய சாலையில் உள்ள பெட்டவாய்த்தலை என்ற சிற்றூர் ஆகும்.
  • இவ்வூர் முற்காலத்தில் வெட்டுவாய்த்தலை என்று பெயரில் அழைக்கபெற்று காலபோக்கில் பெட்டவாய்த்தலை என்று மாறியது.
  • மேலும் வாய்த்தலை என்பது தலைவாய் என்பதன் மாறுபெயர் ஆகும்.
  • அதாவது பொதுவாக ஆற்றிலிருந்து நீர் பாசனத்திற்காக கிளை கால்வாய்களுக்கு வெட்டபட்டு பிரிக்கபடும் முகதுவாரமான முதல் இடத்திற்குத் தலைவாய் என்ற பெயர் உண்டு.
  • அதாவது இவ்விடத்தில் காவிரி ஆற்றிலிருந்து வெட்டப்பட்டு பிரிக்கபடும் நீர்நிலையான உய்யக்கொண்டான் வாய்க்காலின் தலைவாயாக இவ்விடத்தைக் கொண்டிருப்பதால் இப்பெயர் ஏற்பட்டது.[1]

சன்னதிகள்

இச்சிவாலயத்தின் மூலவர் மத்யார்ஜுனேஸ்வரர் என்றும் அம்மன் பாலாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார். கன்னிவிநாயகர், வள்ளி தெய்வானை உடனுரை ஆறுமுகப் பெருமான், கஜலட்சுமி ஆகியோருக்கான தனிச்சன்னதிகள் உள்ளன. இச்சிவாலயத்தில் மிகத் தொன்மையான திருமால் சிலை உள்ளது. கோயிலுக்கு அருகே இருந்த புத்தர் சிலையை அரசு அருங்காட்சியத்தில் வைத்துள்ளது.

இச்சிவாலயத்தின் கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை அம்மன் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. சண்கேசுவரர் மழு ஆயுதத்தோடு அமர்ந்த நிலையில் உள்ளார். சிவாலயத்தின் தல விருட்சமாக வன்னி மரம் அமைந்துள்ளது. இத்தல விருட்சத்தின் கீழே நாகங்களின் சிலைகள் உள்ளன.

வெளிச்சுற்றுப் பிரகாரத்தில் நவகிரகங்கள் மற்றும் பைரவர் சன்னதி அமைந்துள்ளது.

கோயில் அமைப்பு

படிமம்:பெருமாள் சாமி இரண்டு பொண்டாட்டியுடன்.jpg
பேட்டவாய்த்தலை மத்யார்ஜுனேஸ்வரர் கோயில் சிற்பம்

இச்சிவாலயத்தில் ஐந்து நிலைகளைக் கொண்ட இராஜகோபுரம் உள்ளது. அதனருகே திருமால் இரு மனைவியரோடு காட்சி தருகிறார். கோயில் நீளமான அமைப்பினை உடையது. இராஜகோபுரத்திலிருந்து சிவாலயம் வரை மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அம்மண்டபத்தில் அன்னதானம் அளிக்கப்படுகிறது. அருகிலேயே ஆலய நிர்வாக விற்பனைக் கூடம் உள்ளது.

இச்சிவாலயத்தின் மூலவர் கிழக்கு நோக்கி உள்ளார். எனவே அம்மன் தெற்கு நோக்கியும், கன்னிவிநாயகர், ஆறுமுகன், கஜலட்சுமி சன்னதிகள் கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளன.

தல வரலாறு

சோழ மன்னனான மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிகாலத்தில் எண்ணற்ற போர்கள் நடைபெற்றன. அப்போர்களால் வீரர்களைக் கொன்ற பாவம் மூன்றாம் குலோத்துங்கனுக்கு ஏற்பட்டது. அதனால் காவேரி நதியிலிருந்து ஒரு கிளை நதியாக உய்யகொண்டான் ஆறினை வெட்டி, அதன் கரையில் சிவாலயத்தினை அமைத்தார். இச்சிவாலயத்தில் மூலவர் மற்றும் அம்பிகைக்கு தன்னுடைய சோழ மன்னர்கள் கட்டிய கோயிலில் விளங்கும் மூலவர் மற்றும் அம்மன் பெயரை இட்டார்.

மன்னன் வீரர்களைக் கொன்ற கொலைப்பாவமான பிரம்மகத்தி தோசத்தினை இத்தலத்தின் இறைவன் நீக்கினார்.

தல சிறப்பு

பொற்றாள பூவாய் சித்தர்

பொற்றாள பூவாய் சித்தர் எனும் சித்தர் இக்கோயிலில் உள்ள பாலாம்பிகையை வணங்கி, பெண்களுக்கு உண்டாகும் மாதவிடாய், பிரசவம் போன்ற பிரட்சனைகளைத் தீர்த்துவந்தார். அந்த சித்தரின் பீடம் இச்சிவாலயத்தில் அமைந்துள்ளது. தற்போது கருவரைக்கு முன் உள்ள மகாமண்டபத்தில் உள்ள தூணில் பொற்றாள பூவாய் சித்தரின் புடைப்புச் சிற்பம் உள்ளது. இச்சிற்பத்தின் அருகே கோயில் நிர்வாகத்தால் கொடுக்கப்படும் சீட்டில் குறைகளையும், பிராத்தனைகளையும் எழுதி கட்டி விடும் வழக்கம் உள்ளது.

சிற்பங்கள்

படிமம்:பேட்டவாய்த்தலை மத்யார்ஜுனேஸ்வரர் கோயில் சிற்பம்.jpg
பேட்டவாய்த்தலை மத்யார்ஜுனேஸ்வரர் கோயில் சிற்பம்

இச்சிவாலயத்தில் எண்ணற்ற கலைநுட்பமான சிற்பங்கள் அமைந்துள்ளன. இராஜகோபுரத்திற்கு அருகே உள்ள மண்டபத்தின் தூணில் ஒரு தலை இரு உடல் கொண்ட சிற்பம் அமைந்துள்ளது. அம்மன் சன்னதி உள்ள மண்டபத்தில் பிரம்மஹத்தி தோசத்திற்கென உருவம் புடைப்புச் சிற்பமாக உள்ளது. கங்காளநாதர் மற்றும் சரஸ்வதி சிலைகள் நடராஜர் சன்னதிக்கு அருகில் உள்ளன.

புத்தர் சிலை

செப்டம்பர் 1998இல் கோயிலில் இருந்த அறிவிப்புப்பலகையில் "கோயிலுக்கு முன் தோப்பில் ஒரு சமண விக்கிரக உருவமும், சுமார் 6 அடி உயரமுள்ள மஹாவிஷ்ணு சிற்பமும் உள்ளன" என்ற குறிப்பு காணப்பட்டது. அப்போது கோயிலின் நுழைவாயிலின் எதிரே ஒரு புத்தர் சிலை இருந்தது. பார்ப்பதற்கு சமண தீர்த்தங்கரைரைப் போல இருந்தாலும் அச் சிலை புத்தர் சிலைக்குரிய கூறுகளையே கொண்டிருந்தது அறியப்பட்டது. இப்பகுதியில் புத்தர் கோயில் இருந்ததற்கான சான்றாக இந்த சிலையைக் கருதலாம். மே 2002இல் அந்த புத்தர் சிலை அங்கிருந்து எடுக்கப்பட்டு, திருச்சியிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.[2]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 ஸ்தல வரலாறு, அருள்மிகு மத்யார்ஜுனேஸ்வரர் திருக்கோயில், தேவஸ்தானம், பேட்டவாய்த்தலை, திருச்சிராப்பள்ளி, 1994
  2. திருச்சி அருங்காட்சியகத்திற்கு பழமையான புத்தர் வருகை, தினமலர், 17.5.2002

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Wikivoyage