புரசக்குடி காளஹஸ்தீஸ்வரர் கோயில்
புரசக்குடி காளஹஸ்தீஸ்வரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
இக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அய்யம்பேட்டை அருகேயுள்ள சூலமங்கலம் என்னுமிடத்திற்கு அருகே புரசக்குடி என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[1]
இறைவன், இறைவி
இக்கோயிலின் மூலவராக காளஹஸ்தீஸ்வரர் உள்ளார். இறைவி ஞானாம்பிகை எனப்படுகிறார்.[1]
அமைப்பு
வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது பலி பீடம், நந்தி ஆகியவை காணப்படுகின்றன. அதனை அடுத்து உள்ளே செல்லும்போது மூலவர் சன்னதி கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. அம்மன் சன்னதி தெற்கு நோக்கிய நிலையில் உள்ளது. காசி விசுவநாதர் மற்றும் விஸ்வக்ஞானர் என்றழைக்கப்படுகின்ற இரு லிங்கத் திருமேனிகள் உள்ளன. இக்கோயிலில் பைரவர், சூரியன், சந்திரன், சனீசுவரர், ஆஞ்சநேயர், விநாயகர், வரதராஜ பெருமாள், முருகன், சண்டிகேசுவரர் ஆகியோர் உள்ளனர். தேவகோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார். இங்குள்ள தட்சிணாமூர்த்தி சிற்பத்தின் இடப்புற காலுக்கு கீழ் ஓர் அடியவர் காணப்படுகிறார். அந்த அடியவர் இரு கரங்களைக் கூப்பிய நிலையில் தட்சிணாமூர்த்தியை வணங்கும் கோலத்தில், இடுப்புக்குக் கீழே ஆடை அணிந்த நிலையில் காணப்படுகிறார். இச்சிற்பம் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தைச் சார்ந்தது என்று கூறுகின்றனர்.[1]
திருவிழாக்கள்
அன்னாபிஷேகம், பிரதோஷம், சிவராத்திரி போன்ற விழாக்கள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.[1]