பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில்
பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
இக்கோயில் சிவகங்கை மாவட்டத்தில் பட்டமங்கலம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. பட்டமங்கை என்று இவ்வூர் முன்னர் அழைக்கப்பட்டது.[1]
இறைவன், இறைவி
இக்கோயிலின் மூலவராக தட்சிணாமூர்த்தி உள்ளார். இத்தலத்தின் மரம் ஆல மரம் ஆகும். திருவனந்தல், காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, இரண்டாம் காலம், அர்த்த சாமம் என ஆறு கால பூசைகள், விநாயகர் சதுர்த்தி, கார்த்திகை, நவராத்திரி, மாசி மகம், பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட பல விழாக்கள் நடத்தப்படுகின்றன.[1]
அமைப்பு
கிழக்கு நோக்கி காணப்படுகின்ற தட்சிணாமூர்த்தியை இக்கோயிலில் காணலாம். ஐந்து தலை கொண்ட சண்முகநாதர் வள்ளி தெய்வானையுடன் உள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைப் போல பொற்றாமரைக் குளத்தைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. திருமால் பன்றியாகவும், பிரம்மா அன்னமாகவும் இருக்க, புன்னகை தவழும் முகத்துடன் பிறைமதி, கொன்றை, வலது மேற்கரத்தில் அக்னியும், வலது கீழ்க்கரத்தில் ஞான முத்திரையும், இடது மேல் கரத்தில் நாகமும் கொண்டு, இடது கீழ்க்கரத்தை தொடையில் வைத்தபடி தட்சிணாமூர்த்தி காட்சியளிக்கிறார். காளி வடிவில் உமை இங்கு உள்ளார்.[1]