திருவேங்கைவாசல் வியாக்ரபுரீசுவரர் கோயில்
திருவேங்கைவாசல் வியாக்ரபுரீசுவரர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 10°24′51″N 78°46′27″E / 10.4143°N 78.7743°ECoordinates: 10°24′51″N 78°46′27″E / 10.4143°N 78.7743°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | புதுக்கோட்டை |
அமைவிடம்: | திருவேங்கைவாசல் |
சட்டமன்றத் தொகுதி: | விராலிமலை |
மக்களவைத் தொகுதி: | கரூர் |
ஏற்றம்: | 151 m (495 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | வியாக்ரபுரீசுவரர் |
தாயார்: | பார்வதி தேவி |
சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
திருவேங்கைவாசல் வியாக்ரபுரீசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.
அமைவிடம்
இக்கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் வட்டத்தில் திருவேங்கைவாசல் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. திருவேங்கைபதி என்றும் இவ்வூர் அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 151 மீட்டர் உயரத்தில், 10°24′51″N 78°46′27″E / 10.4143°N 78.7743°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, திருவேங்கைவாசல் வியாக்ரபுரீசுவரர் கோயில் அமையப் பெற்றுள்ளது.[1]
இறைவன், இறைவி
இக்கோயிலின் மூலவராக வியாக்ரபுரீசுவரர் உள்ளார். வியாக்ரம் என்றால் புலி என்று பொருளாகும். இறைவி பார்வதி தேவி ஆவார். கோயிலின் மரம் வன்னி ஆகும். [1] மூலவர் திருவேங்கைநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். [2]
அமைப்பு
மேற்கு நோக்கிய நிலையில் உள்ள மூலவரின் மீது மாலை நேரத்தில் சூரிய ஒளி விழுகிறது. மூலவருக்கு எதிராக கணபதி காணப்படுகிறார். அம்மன் சன்னதி தனியாக உள்ளது. விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, ராஜ கணபதி, கஜலட்சுமி, பைரவர், பெருமாள், சூரியன், சனீசுவரன் ஆகியோர் இக்கோயிலில் உள்ளனர். தட்சிணாமூர்த்தி அர்த்தநாரீசுவர தட்சிணாமூர்த்தியாக வித்தியாசமான கோலத்தில் உள்ளார். கோயிலின் திருச்சுற்றில் எண்கோண வடிவில் வித்தியாசமான அமைப்பில் முருகன் சன்னதி உள்ளது. முருகன் ஒரு காலை மடித்து, மற்றொரு காலை அமர்ந்துள்ளார். முருகனுக்கு அருகே வேலோ, மயிலோ காணப்படவில்லை. நவக்கிரக சன்னதி இல்லாத இக்கோயிலில் ஒரு சன்னதியில் ஒன்பது விநாயகர்கள் உள்ளனர். சிவன் சன்னதியிலிருந்து தேரடி விநாயகர் சன்னதியையும், முருகன் சன்னதியிலிருந்து கால பைரவர் சன்னதியையும், பெருமாள் சன்னதியிலிருந்து மகாலட்சுமி சன்னதியையும் காணும் வகையில் சன்னதிகள் அமைந்துள்ளன. [1]
வரலாறு
ஒரு முறை காமதேனு தாமதமாகச் சென்றதால் இந்திரனின் சாபத்திற்கு உள்ளானார். காமதேனு தன்னுடைய சாபம் நீங்குவதற்காக கபில முனிவரிடம் கருத்து கேட்க அவர் இரு காதுகளிலும் கங்கை நீரை நிரப்பி சிவனை வழிபட்டால் சாபம் நீங்கும் என்று கூறினார். இந்த முறையை தொடர்ந்து செய்து வந்த காமதேனுவின் பக்தியை சோதிக்க சிவன் புலி உருவில் வந்து காமதேனுவைக் கொல்லப் போவதாகக் கூறினார். சிவ பூசை முடித்து வந்தபின் தன்னைக் கொல்லலாம் என்று காமதேனு கூறவே, சிவன் காமதேனு மீது பாய்வது போலப் பாய்ந்து சென்று தேவியுடன் காட்சி தந்து சாபத்திற்கு விமோசனம் தந்தார். சாப விமோசனம் அடைந்த காமதேனு தன்னைப் போலவே அனைவருக்கும் அருள வேண்டும் என்று கேட்க, காமதேனுவின் ஆவலை பூர்த்தி செய்தார் சிவபெருமான்.[1]
திருவிழாக்கள்
மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் போன்றவை இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களாகும். [1] வைகாசி விசாகம் பத்து நாள்கள் மற்றும் தைப்பூசம் போன்ற விழாக்களும் கொண்டாடப்படுகின்றன. [2]