திருவாரூர் யக்ஞேயசுவரர் கோயில்

திருவாரூர் யக்ஞேயசுவரர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

இக்கோயில் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரில் அமைந்துள்ளது. [1]

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக கிழக்கு நோக்கிய நிலையில் யக்ஞேயசுவரர் உள்ளார். இறைவி உத்ரவேதி தெற்கு நோக்கிய நிலையில் காணப்படுகிறார். சிவனும், பார்வதியும் கைலாசத்தில் வடக்கு திசையில் உள்ளனர். உத்திரம் என்றால் வடக்கு, வேதி என்றால் தேவி என்ற நிலையில் உத்ரதேவியாக இறைவி உள்ளார். திருவாரூர் தியாகராசர் கோயிலுக்கான தீர்த்தமான கமலாலயமே இக்கோயிலின் தீர்த்தம் ஆகும். [1]

அமைப்பு

வழக்கமாக கோயில்களின் பிரதான வாயில் மூலவருக்கு எதிரே காணப்படும். ஆனால் இக்கோயிலின் பின் புறத்தில் மேற்குத் திசையில் காணப்படுகிறது. திருச்சுற்றில் பைரவர், சனீசுவரர், சூரியன், சண்டிகேசுவரர் உள்ளனர். அருகில் நவக்கிரக சன்னதி உள்ளது. திருச்சுற்றில் கைலாசநாதர் 16 பட்டைகளுடன் காணப்படுகிறார். ஐந்து தலையைக் கொண்டிருந்த பிரம்மா, சிவனுக்கு இணையாக தன்னை எண்ணிக்கொண்டு கர்வம் அடைந்தார். அவரது கர்வத்தை அடக்கும் நிலையில் சிவன் பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்தார். தவறை உணர்ந்த பிரம்மா அதனைச் சரிசெய்ய இத்தலத்தைத் தேர்ந்தெடுத்து ருத்ர யாகம் என்ற பெயரில் யாகத்தை நடத்தினார். அவரது வேண்டுகோள் நிறைவேறவே, மீண்டும் படைக்கும் ஆற்றலை சிவன் மூலமாகப் பெற்றார். ஆதலால் இத்தல இறைவன் யக்யேசுவரர் என்றும் யாகநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.[1]

திருவிழாக்கள்

சிவராத்திரி, கார்த்திகை போன்றவை இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களாகும்.

மேற்கோள்கள்