திருச்சி செல்லாண்டியம்மன் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search


திருச்சி செல்லாண்டியம்மன் கோவில்

மூலவர்: செல்லாண்டியம்மன்
உற்சவர்: பனையோலை அம்பிகை
பழைமை: 500 முதல் 1000 ஆண்டுகள்
காவல் தெய்வங்கள்: கருப்பண்ணசுவாமி, மதுரைவீரன்
பரிவார தேவதைகள்: வலம்புரி விநாயகர்
தீர்த்தம்: காவிரி
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி

வரை

கோவில் விழாக்கள்: ஒவ்வொரு ஆண்டும் சித்திரை 7 ஆம் தேதி காளி ஓட்டத் திருவிழா,

புரட்டாசியில் லட்சார்ச்சனை,
நவராத்திரி விஜயதசமி,
ஆடி மற்றும் தை வெள்ளி விழாக்களும் உண்டு,

அமைவிடம்: பாண்டமங்கலம்,
உறையூர் (திருச்சி)
மாவட்டம்: திருச்சி
மாநிலம்: தமிழ்நாடு, இந்தியா

திருச்சி, உறையூர், பாண்டமங்கலம் செல்லாண்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் காவிரி நதியுடன், குடமுருட்டி நதி சங்கமிக்கும் இடத்தின் தென்கரையில் கோவில் அமைந்துள்ளபடியால் காவிரியே இத்தலத்தின் தீர்த்தமாகும். செல்லாண்டியம்மனுக்கு மற்ற தெய்வங்களைப் போல தலை, கை மற்றும் உடல் இல்லை. கருவறையில் உள்ள மூலவர் சிலை இடுப்ப்புக்குக் கீழே உள்ள அங்கங்கள் மட்டும் உள்ளன. இது சற்று மாறுபட்ட சிலை அமைப்பாகும்.

கருவறை

அம்மன் இத்தலத்தில் இடுப்பிற்கு கீழ் உள்ள பகுதியினை மட்டும் காட்டி தன சூலத்தால் அசுரனை வதம் செய்தபடி கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளாள். எனினும் அம்மனை முழு உருவம் உள்ள சிலை போல அலங்காரம் பண்ணியுள்ளார்கள். அபிஷேகததின் போது மட்டும் பாதம் பார்க்கலாம். இந்த சிலைக்குப் பின்னால் தற்காலத்தில் செய்த ஒரு முழு உருவச்சிலையும் கருவறையில் உள்ளது.

உற்சவர்

ஒவ்வொரு வருடமும் திருவிழா நடக்கும்போது, பனை ஓலையில் அம்மனை எழுந்தருளச்செய்கிறார்கள். இந்த ஓலையில் அம்மன் அருள்பாலிப்பதாக நம்பிக்கை உள்ளது..

தல வரலாறு

இத்தலத்தின் வரலாறு தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய அரசர்களுக்குள் ஏற்பட்ட ஒரு பிரச்சினையை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது. மூவேந்தர்கள் ஆட்சிப் பொறுப்பினை ஏற்பதற்கு முன்பு தமிழ் நாட்டை எவ்வாறு பிரித்து பங்கிட்டுக் கொள்வது என்பது ஒரு பெரும் சிக்கலாக உருவானது. தங்களுக்குள் ஏற்பட்ட சிக்கலை மூன்று மன்னர்களுக்கும் பொதுவான ஒருவர் தான் தீர்த்து வைக்க முடியும் என்று நம்பினார்கள். தாங்கள் வணங்கும் அம்மனை நோக்கி வேண்டினார்கள். நல்ல தீர்ப்புக்காக அம்மனை நோக்கித் தவமியற்றினார்கள். அம்மனும் மனமிரங்கி அவர்களின் சிக்கலைத் தீர்க்க எண்ணி அவர்கள் முன் தோன்றினாள். மூவேந்தர்கள் தங்கள் பிரச்சனையை எடுத்துக் கூறி ஒவ்வொருவரும் ஆள வேண்டிய நாட்டின் பகுதிகளை சமமாகப் பங்கிட்டுத் தரும்படி அம்மனை வேண்டினர்.

அம்மனும் அவர்கள் விருப்பப்படி நாட்டை மூன்று பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனி எல்லைகள் வகுத்துக் கொடுத்தாள். மன்னர்கள் மனமகிழ்ந்து அம்மனை தங்கள் நாட்டிலே எழுந்தருளுமாறு வேண்டினர். அவர்களுக்காக செல்லாண்டி அம்மன், தன்னைத்தானே மூவருக்கும் மூன்று பாகமாகப் பிரித்தளித்து, அவர்கள் நாட்டில் எழுந்தருளினாள் என்கின்றனர். அதன்படி, பாகம் ஒன்று மதுரையிலும், பாகம் இரண்டு கோவையிலும், மூன்றாவது பாகம் திருச்சியிலும் அமையப் பெற்றதாம். சோழ மன்னன் மட்டும் தன்னுடைய நாடு எப்போதும் செழிப்பாக இருக்கும்படி அருள வேண்டும் என வேண்டினான். அம்மனும் அவன் வேண்டுதலை ஏற்று காவிரி நதியால் சோழ நாடு எப்போதும் செழிப்புற்றிருக்கும்படி அருளினாள். சோழ மன்னனுக்கு அருள் செய்த அம்மன், இத்தலத்தில் செல்லாண்டியம்மனாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.

பரிவார தேவதைகள்

கோயில் முன்மண்டபத்தில் கருப்பண்ணசுவாமி, மதுரைவீரன் ஆகிய காவல் தெய்வங்கள் தனித்தனி சன்னதிகளில் இருக்கின்றனர். வளாகத்தில் அரசமரத்தின் கீழ் வலம்புரி விநாயகர் காட்சி தருகிறார்.

படையல்

பௌர்ணமி தினங்களில் மாலையில் அம்மனுக்கு உப்பில்லாத அன்னம் மற்றும் நவதானியம் படைக்கப்படுகின்றன. அம்மனின் பிரசாதமாக இவற்றையே விநியோகிக்கிறார்கள். தொடர்ந்து பிரசாதம் உண்டால் குழந்தைப்பேறு உண்டு என்ற நம்பிக்கை உள்ளது.

வேண்டுதல்கள்

திருமணம், குழந்தைப்பேறின்மை போன்ற இன்னல்கள் அகலுவதற்கு, பெண்கள் பௌர்ணமியில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்

வேண்டுதல்கள் நிறைவேறியவுடனேயே வேண்டியவர்கள் தாலி மற்றும் எலுமிச்சை மாலை அணிவித்தும், விளக்கு ஏற்றியும் வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள்.

திருவிழா

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை 7 ஆம் தேதி காளி ஓட்டத் திருவிழா நடைபெறுகிறது. தொடக்க காலத்தில் அம்மனைத் தூக்கிக்கொண்டு ஓடும் வழக்கம் இருந்தது. எனவே இவ்விழாவினை "காளி ஓட்டத் திருவிழா' என்று அழைத்தனர். தற்போது இவ்வழக்கம் நடைமுறையில் இல்லை. புரட்டாசியில் லட்சார்ச்சனை, நவராத்திரி, ஆடி மற்றும் தை வெள்ளி விழாக்களும் உண்டு.

மேற்கோள்கள்

செல்லாண்டியம்மன் தல வரலாறு (நூல்)