திண்டுக்கல் சீனிவாசப்பெருமாள் கோயில்
திண்டுக்கல் சீனிவாசப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.
அமைவிடம்
சீனிவாசப்பெருமாள் கோயில், தாலுகா அலுவலக சாலையில் அமைந்துள்ளது. இக்கோயில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து 6 கி. மீ. தொலைவில் உள்ள ரங்கநாதபுரம் மலையின் மீது அமைந்துள்ளது. இக்கோவில் இரயில் நிலையத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. [1] இத்தலம் பத்மாசலம் என்றும் அழைக்கப்படுகிறது. [2] மலையின் ஏறிச்செல்ல 175 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பஸ் மற்றும் கார் மூலம் பயணித்து மலைக்கோவிலை அடைவதற்கு சாலை வசதி செய்யப்பட்டுள்ளது.
முகவரி
ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் திருக்கோயில், அரங்கநாதபுரம், செட்டிநாயக்கன்பட்டி 624004 திண்டுக்கல்.
திறக்கும் நேரம்
காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர், தாயார்
துவாபர யுகத்தில் பெருமாளானவர் உலக உயிர்களுக்கு காட்சி தர வேண்டும் என்பதற்காக ரிஷிகளும் முனிவர்களும் அவரை வேண்டி நின்றனர். அப்போது அவர்கள் தவம் மேற்கொள்வதோடு யாகமும் செய்ய முடிவெடுத்தனர். அந்த யாகத்தில் கலந்துகொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. யாகம் துவங்க இருந்த நேரத்தில் திண்டசூரன் என்ற பெயரிலான ஒரு அசுரன் யாகத்தால் தனக்கு தொல்லை விளையும் என எண்ணி தடுத்தான். பெருமாள் அங்கு தோன்றி அவனை தன் காலை வைத்து பூமிக்குள் அனுப்பினார். அத்தகு பெருமை வாய்ந்த மூலவர் சீனிவாசப்பெருமாள் எனவும் உற்சவர் கல்யாண சீனிவாசர் எனவும் அழைக்கப்படுகின்றனர். இறைவன் பத்ம விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி அமைந்து அருள்பாலித்து வருகின்றார். தாயார் அலர்மேல்மங்கை ஆவார். அவருக்கு தனி சன்னதி உள்ளது. பக்தர்களின் வேண்டுதலை ஏற்று ஸ்ரீதேவி பூதேவியுடன் திருமணக் கோலத்தில் சீனிவாசராக, மலைஅடிவாரத்தில் நெல்லி மரத்தடியில் காட்சி கொடுத்த பெருமை உடையது இத்தலமாகும். [1]
அமைப்பு
இக்கோயிலின் நுழைவு வாயிலில் சந்நிதியைப் பார்த்த வகையில் சுதையால் அமைந்த சுமார் 20 அடிக்கும் உயர கருடாழ்வார் உள்ளார். அவர் இரு கைகளையும் கூப்பிய நிலையில் பெருமாளை வணங்கி நின்றவாறு உள்ளார். இக் கோயிலின் தல விருட்சமாக நெல்லி மரம் உள்ளது. இக்கோயிலின் தீர்த்தம் சூரிய தீர்த்தம் ஆகும். இக்கோயிலில் தாமோதர விநாயகர், நவநீத கிருஷ்ணன், நவகிரகங்கள், ஆஞ்சநேயர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், ஆண்டாள் ஆகியோர் காணப்படுகின்றனர். அபய வரத முத்திரையுடன் கூடிய ஆஞ்சநேயர் தனி சன்னதியில் உள்ளார். இவர் கிரக தோஷங்களை நீக்கி சுகம் அளிக்கக்கூடிய வல்லமை பெற்றவர் என்று கூறுகின்றனர். சக்கரத்தாழ்வார் தனி சன்னதியில் உள்ளார். அவரைச் சுற்றி திருமாலின் பத்து அவதாரங்களும் உள்ளன. பின்புறத்தில் நான்கு கரங்களிலும் சக்கரம் ஏந்தியவாறு நரசிம்மர் உள்ளார். நரசிம்மரைச் சுற்றி அஷ்டலட்சுமிகள் எனப்படுகின்ற எட்டு லட்சுமிகளும் காணப்படுகின்றனர். [1]
திருமணத் தலம்
உற்சவர் கல்யாண சீனிவாசன் என்ற பெயரோடு உள்ளதால் இத்தலத்தைத் திருமணங்கள் நடைபெறும் தலமாக மக்கள் கருதி வழிபட்டு வருகின்றனர். திருமணத்தடை நீங்குவதற்காக கல்யாண சீனிவாசனுக்கு திருக்கல்யாணம் செய்து வைக்கின்ற பெருமையினை இக்கோயில் பெற்றுள்ளது. மேலும் மால்யம் மற்றும் பித்ரு தோஷத்திலிருந்து விலக இறைவனுக்கு நெல்லி இலைகளால் அர்ச்சனை செய்து பொதுமக்கள் வழிபடுகிறார்கள். [1]
விழாக்கள்
இக்கோயிலில் நடைபெறுகின்ற திருக்கல்யாண விழா நடைபெறுகிறது. மேலும் பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், பங்குனி உத்திரம், வைகாசி, பவித்ரோத்ஸவம் ஆகிய நாள்களில் திருக்கல்யாணம் நடத்தப்பெறுகிறது. புரட்டாசி மாதம் 5 சனிக்கிழமைகள் முக்கியமான நாள்களாக அமைந்துள்ளன. புரட்டாசி மாதத்தில் கல்யாண சீனிவாசரிடம் பக்தர்கள் தம்முடைய பிரார்த்தனைகளை முன்வைத்தால், அவை பலிக்கும் என்று நம்புகின்றனர். புதன், சனிக்கிழமைகள், அமாவாசை, பெளர்ணமி ஆகியவை இக்கோயிலின் சிறப்பு நாள்களாகும். [1]
அருகிலுள்ள கோயில்கள்
இக்கோயிலுக்கு அருகில் அபிராமியம்மன் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில் ஆகிய கோயில்கள் உள்ளன. [2]