ஜார்ஜ் டவுன் கச்சாலீசுவரர் கோவில்
கச்சாலீசுவரர் கோவில் | |
---|---|
கச்சாலீசுவரர் கோவில் முன்புறத் தோற்றம் கச்சாலீசுவரர் கோவில் முன்புறத் தோற்றம் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சென்னை |
அமைவு: | 77 ஆர்மீனியன் தெரு சென்னை |
ஆள்கூறுகள்: | 13°02′01″N 80°16′13″E / 13.033634°N 80.270199°ECoordinates: 13°02′01″N 80°16′13″E / 13.033634°N 80.270199°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிட கலைப்பாணி |
வரலாறு | |
அமைத்தவர்: | கலவை செட்டி |
கச்சாலீசுவரர் கோவில் என்னும் மாபெரும் கச்சாலி பகோடா (Great Kachali Pagoda) தமிழ்நாட்டின் சென்னை மாநகரம், ஜார்ஜ் டவுன், ஆர்மீனியன் தெருவில் அமைந்துள்ள சிவன் கோவிலாகும். கி.பி. 1725 ஆம் ஆண்டில் ஆர்மீனியன் தெருவில் உள்ள துபாஷ் கலவை செட்டிக்குச் (dubash Kalavai Chetty) சொந்தமான இடத்தில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. அன்றைய மதராஸ் நகரில் இடது கை மற்றும் வலது கை சாதிப்பிரிவுகளும் (left and right-handed castes) இடம் பெற்றிருந்தன. இப்பிரிவுகளுக்கிடையே பல மோதல்களும் நிகழ்ந்தன. முதன்முதலில் இங்குதான் இப்பிரிவுகளுக்கிடையேயான மோதல் நிகழ்ந்தது.[1]
இக்கோவில் காஞ்சிபுரத்தில் உள்ள கச்சாலீசுவரர் கோவிலை முன்மாதிரியாகக் கொண்டது. இக்கோவிலின் மூலவர் கச்சாலீசுவரர் (சிவன்); அம்பிகை சௌந்திராம்பிகை ஆவர்.
வரலாறு
இக்கோவில் கி.பி. 1725 ஆம் ஆண்டில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்காகப் பணிபுரிந்த 'துபாஷ்' கலவை செட்டி என்பவரால், அவருக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டது..[1] கலவை செட்டி ஒரு சிவ பக்தர். அடிக்கடி காஞ்சிபுரத்திலுள்ள கச்சாலீசுவரர் கோவிலுக்குச் சென்று கச்சாலீசுவரரை வணங்கி வருவது வழக்கம். கலவை செட்டியும் அவர் மனைவி சௌந்தரம்மாளும் கச்சாலீசுவரருக்கு மதராஸில் ஒரு கோவில் கட்ட முடிவு செய்தனர். கோவில் திருப்ப்பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.[1]
இவ்வாறு கோவில் திருப்பணிகள் நடைபெற்று வந்த காலத்தில் ஒரு சமயம் கலவை செட்டியும் அவர் மனைவியும் கச்சாலீசுவரரை வணங்கிய பின்னர் காஞ்சிபுரத்திலிருந்து மதாராசிற்குத் திரும்பிக்கொண்டிருந்தார். பலத்த மழை பெய்ததால் பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. குறித்த நேரத்தில் சென்னை திரும்ப இயலவில்லை. வெள்ளம் வடிய ஒரு வாரம் ஆனது. மதராசில் கோவில் திருப்பணிகள் தடையுற்றதை எண்ணிப் புலம்பியவாறு சென்னை வந்து சேர்ந்த அவருக்கு அதிசயம் காத்திருந்தது. கோவில் பணிகள் யாவும் நிறைவுற்றிருந்தன. இறைவனின் திருவிளையாடலை எண்ணி கலவை செட்டி உளமகிழ்ந்தார்.[2]
மூன்று வருடங்களுக்குள் இக்கோவில் கட்டி முடிக்கப்பட்டது. கி.பி. 1728 ஆம் ஆண்டு இக்கோவில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடந்தேறியது.[3] கோவில் இருக்கும் தெரு முதலில் "கச்சால பகோடா தெரு" என்றும், கோவில் "மாபெரும் கச்சாலி பகோடா" என்றும் அழைக்கப்பட்டன.[1] அன்றைய நாட்களில் கோவிலில் நடனமாடும் தேவதாசிப் பெண்களின் அணி இக்கோவிலுடன் இணைக்கப்பட்டிருந்தது. 1700 ஆம் ஆண்டுகளில் இந்தத் தேவதாசிப் பெண்கள் கோவிலை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த குடியிருப்புகளில் வாழ்ந்துவந்தனர்.[1]
"பிளாக் டவுனின்" முதல் சாதிச் சர்ச்சைகளுக்கு இடமளித்த கோவிலாக இக்கோவில் கருதப்படுகிறது. இடது கைப்பிரிவு சாதியைச் சேர்ந்த ஒருவரால் கட்டப்பட்ட கோவில் இதுவாகும். அன்றைய ஆங்கில அரசின் தலையீட்டால் வலது கைப்பிரிவைச் சேர்ந்தவர்களது சொத்துக்களை ஆக்கிரமிக்காதாவாறு புதிய அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டது.[1][4]
இக்கோவிலின் குடமுழுக்கு விழா கி.பி. 1728 ஆம் ஆண்டு நடைபெற்றதாக இக்கோவிலில் உள்ள தகவல் பலகை பதிவு செய்துள்ளது. இந்திய நாட்டின் விடுதலைக்குப் பிறகு, 1962 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி ஒரு மஹா-கும்பாபிஷேகம் (பெரும் குடமுழுக்கு) நடைபெற்றது. கோவிலின் சீரமைப்புத் திருப்பணிகள் 20 பிப்ரவரி 1984 ஆம் தேதி தொடங்கியது சீரமைப்புத் திருப்பணிகள் முடிவுற்றதும் மற்றொரு பெரிய கும்பாபிஷேகம் 9 ஜூலை 1989 தேதி அன்று நடைபெற்றது.[3]
கோவில் அமைப்பு
கிழக்குப் பார்த்து அமைந்த கோவில் இதுவாகும். நுழைவாயிலை ஒட்டி அமைந்துள்ள வெளிப்பிரகாரத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தி, சிறீ மூலகணபதி, ஸ்ரீ வள்ளி, தேவசேனா, சுப்பிரமணியர் சன்னிதிகள் ஆகியவற்றைக் காணலாம். கருவறை, அர்த்தமண்டபம், மற்றும் மகாமண்டபம் ஆகிய அமைப்புடன் மூலவர் சன்னிதி திகழ்கிறது. இக்கோவிலின் மூலவர் கச்சாலீசுவரர்; அம்பிகை சௌந்தராம்பிகை ஆவர்.[3] கருவறையின் இருமருங்கிலும் உள்ள கோட்டங்களில் சித்தி மற்றும் புத்தி உடனான ஐந்துமுகங்கொண்ட ஹேரம்ப விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் ஆகிய தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்.
வடமொழியில் "கச்சபம்' என்ற சொல்லுக்கு "ஆமை' என்று பொருள். கருவறையில் உள்ள சிவலிங்கம், கூர்மம் (ஆமை), நாகம், சிம்மம், யுகங்கள், பத்மம் ஆகிய ஐந்து ஆசனங்களின் மீது அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு..[2] இது பஞ்சாசனம் என்று அழைக்கப்படுகிறது. இது சற்று அபூர்வமான அமைப்பாகக் கருதப்படுகிறது.[3] சிவலிங்கத்திற்குப் பின்புறம் கருவறை சுவரில் சதாசிவ மூர்த்தி அருள்பாலிக்கிறார்..[3] சௌந்தராம்பிகை கருவறையை ஒட்டி இலக்குமி மற்றும் சரசுவதி ஆகியோரின் சன்னிதிகள் உள்ளன.
விமானத்தின் வெளிப்புறச் சுவரில் அமைக்கப்பட்ட கோட்டங்களில் கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்க்கை. ஆகிய தெய்வ உருவங்கள் நிறுவப்பட்டுள்ளன. உள்பிரகாரத்தில் இடம்பெற்றுள்ள நவக்கிரக மண்டபம் குறிப்பிடத்தக்கது. இம்மண்டபத்தில் நவக்கிரகங்கள் நின்றவாறு கட்சி தருகின்றனர். மையத்தில் சூரியன் உஷா மற்றும் பிரதியுஷா உடன் காட்சி தருவது சிறப்பு. இம்மண்டபத்தின் மேற்கூரையில் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 60 வருடங்கள், நான்கு யுகங்கள், அட்டதிக்குப் பாலர்கள் .ஆகியோர் சிற்பங்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.[2] 63 நாயன்மார்கள், சைவக்குரவர்கள் நால்வர், தத்தாத்ரேயர், துர்க்கை, ஆதிசங்கரர், மூலகேஸ்வரர், கச்சியப்ப சிவாச்சாரியார், ஹரதத்தர் ஆகியோர் சன்னிதி கொண்டுள்ளனர்.[2][3]
திறக்கும் நேரம்
காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்[2]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Madras Rediscovered. Muthiah, S. EastWest, Chennai, 2014. isbn = 978-93-84030-28-5 பக். 383
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 அருள்மிகு கச்சாலீஸ்வரர்(கச்சபேஸ்வரர்) திருக்கோயில் தினமலர்
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 திருக்கோயில்கள் வழிகாட்டி: சென்னை மாவட்டம் Government of Tamil Nadu, Department of Hindu Religious and Charitable Endowments, Chennai, July 2014. பக் 184–186
- ↑ Madras: Tracing the growth of the city since 1639. K. R. A. Narasiah. Palaniappa Brothers, Chennai, 2016. isbn = 978-81-8379-687-3. பக். 245