சாக்கோட்டை வீரசேகரர் கோயில்
சாக்கோட்டை வீரசேகரர் கோயில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
இக்கோயில் சிவகங்கை மாவட்டத்தில் சாக்கோட்டை என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இத்தலம் முன்னர் வீரை வனம் என்றழைக்கப்பட்டது.[1] கடல் மட்டத்திலிருந்து சுமார் 97 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 10°05'43.3"N, 78°51'15.9"E (அதாவது, 10.095355°N, 78.854410°E) ஆகும்.
இறைவன், இறைவி
இக்கோயிலின் மூலவராக வீரசேகரர் உள்ளார். இறைவி உமையாம்பிகை ஆவார். கோயிலின் தல மரம் வீரை ஆகும். கோயிலில் தல தீர்த்தமாக சோழா குளம் உள்ளது. ஆனி மற்றும் ஆடியில் பத்து நாள்கள் விழா நடைபெறுகிறது. இதுதவிர சிவராத்திரி, கந்த சஷ்டி உள்ளிட்ட பல விழாக்கள் நடைபெறுகின்றன.[1]
அமைப்பு
ஒன்பது நிலை ராஜ கோபுரத்தைக் கொண்ட இக்கோயிலில் இறைவனும், இறைவியும் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். இத்தல விநாயகர் விக்கிரம விஜய விநாயகர் ஆவார். பைரவர் இரட்டை நாய் வாகனக்ளுடன் உள்ளார். வனமாக இருந்த பகுதிக்கு வந்த வேடன் ஒருவன், ஒரு மரத்தின் அருகிலிருந்த வள்ளிக்கிழங்குக் கொடியைத் தோண்ட முயற்சிக்கும்போது மண்ணிலிருந்து இரத்தம் வெளிவரவே அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது லிங்கத் திருமேனி இருந்ததாகவும், அதை மன்னரிடம் தெரிவிக்க நோய்வாய்ப்ப்பட்டிருந்த மன்னர் அங்கு ஒரு கோயிலைக் கட்டியதாகக் கூறுகின்றனர். [1]