கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயில்
கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயில் | |
---|---|
படிமம்:Krishnapuram1.jpg | |
தமிழ்நாட்டில் அமைவிடம் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருநெல்வேலி |
அமைவு: | கிருஷ்ணாபுரம் |
ஆள்கூறுகள்: | 8°36′43″N 77°58′19″E / 8.61194°N 77.97194°ECoordinates: 8°36′43″N 77°58′19″E / 8.61194°N 77.97194°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயில் (கிருஷ்ணாபுரம் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது தென்னிந்தியாவின், தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் என்ற ஊரில் உள்ள ஒரு விஷ்ணு கோயிலாகும். இது திருநெல்வேலியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. திராவிடக் கட்டிடக்கலையில் கட்டபட்ட இந்த கோயில் நாயக்கர் கட்டிடக்கலைகளின் களஞ்சியமாக உள்ளது.
கோயிலைச் சுற்றி கல்லாலான மதில் சுவர் இக்கோயிலைச் சார்ந்த அனைத்து சிற்றாலயங்களையும் உள்ளடக்கியதாக உள்ளது. இந்த கோவிலில் ஐந்து அடுக்கு இராசகோபுரம் உள்ளது. விஜயநகர மற்றும் நாயக்க மன்னர்களில் கலையம்சங்களுடைய 16 ஆம் நூற்றாண்டய தூண்கள் கொண்ட மண்டபங்களானது கோயில் வளாகத்தில் அமைக்கபட்டுள்ளன.
இந்த கோயிலில் தென்கலை வழிபாட்டு முறை பின்பற்றப்படுகிறது. கோயிலில் நாள்தோறும் நான்கு கால பூசைகளும் ஆண்டுதோறும் மூன்று விழாக்களும் நடத்தப்படுகின்றன. இவற்றில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசியானது தமிழ் மாதமான மார்கழி நடத்தப்படுகிறது. இந்த கோயிலானது தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையால் பராமரிக்கப்படுகிறது.
வரலாறு
இக்கோயிலின் கல்வெட்டும் 16 ஆம் நூற்றாண்டில் அளிக்கபட்ட பல்வேறு மானியங்கள் குறித்து தெரிவிக்கின்றன. மதுரை நாயக்க மரபின் நிறுவனரான விசுவநாத நாயக்கரின் மகனான கிருஷ்ணப்ப நாயக்கரால் (1563–72) இந்த கோயில் கட்டப்பட்டது என்பது இந்த கல்வெட்டுகளில் இருந்து தெரியவருகிறது. கோயிலைச் சுற்றியுள்ள பிரகாரம் உயர்ந்த கோயில் கோபுரம் ஆகியவற்றுக்கும் கிருஷ்ணப்ப நாயக்கரே காரணமாக இருந்துள்ளார். கோவில் தேர் சீராக செல்ல வசதியாக கிருஷ்ணப்ப நாயக்கர் கோயிலைச் சுற்றி நான்கு மாடவீதிகளையும் அமைத்தார். இந்த கிராமமானது முதலில் திருவேங்கடராயபுரம் என்ற பெயர் கொண்டதாக இருந்தது. கிருஷணப்ப நாயக்கரின் ஆட்சியின் போது கிருஷ்ணாபுரம் என்று பெயர் மாற்றபட்டது. அமைச்சர் விஸ்வநாதரின் மருமகனான தெய்வாச்சிலையார் (மயிலேறும் பெருமாள்) கோயில் கட்டுமானத்தில் முக்கியப் பங்கு வகித்தார். கோயிலில் அவர் செய்த பணிகள் பற்றிய விரிவான விவரங்கள் குமாரசாமி அவதானியாரால் பாடப்பட்ட தெய்வச்சிலையார் விறலி விடு தூது மற்றும் கால்டுவெல் எழுதிய திருநெல்வேலி சரித்திரம் என்ற வரலாற்று நூலிலும் புகழப்பட்டுள்ளன. [1]
விஜயநகரப் பேரரசின் சதாசிவ ராயனின் செப்பேடுகள் கோயிலில் விளக்கெரிய வயல்களை மானியமாக விடப்பட்டதைக் குறிக்கின்றன. கோயிலின் தொடர் செலவுகளுக்காக ஆறு கிராமங்களில் இருந்து வரும் வருவாய் வழங்கப்பட்டது. அரியகுளம், கொடிக்குளம், குத்துகாவல், புதனேரி, பொட்டுகலம், ஸ்ரீராமாகுளம், அலிக்குடி ஆகிய கிராமங்கள் கோயிலின் தினசரி பூசைகளுக்காக கோயிலுக்கு மானியமாக விடப்பட்டன. வேதங்கள் மற்றும் அகமங்களை நன்கு அறிந்த 108 பிராமணக் குடும்பங்களை குடியமர்த்த ஒரு அக்ரகாரம் நிறுவப்பட்டது. [1]
இந்த கோயில் முதலில் திருநெல்வேலியில் உள்ள இராமசாமி கோயிலின் துணைக் கோயிலாக நிர்வகிக்கப்பட்டது, ஆனால் 1973 முதல் நெல்லையப்பர் கோவிலின் நிர்வாகத்தின் கீழ் வந்தது. இது 1986 முதல் திருச்செந்தூர் தேவஸ்தான நிருவாகத்தின் கீழ் வந்தது. [1]
கட்டக்கலை
இந்த கோயில் 1.8 ஏக்கர்கள் (0.73 ha) பரப்பளவிலான வளாகமானது கருங்கல் மதிலால் சூழப்பட்டுள்ளது. இந்த கோவிலில் முதலில் மூன்று பிரகாரங்கள் இருந்தன. அவற்றில் வெளிப்புற பிரகாரமானது ஆற்காடு நவாப்பின் உத்தரவினால் சந்தா சாகிப்பால் இடிக்கப்பட்டது. அக்கற்கள் பாளையங்கோட்டையில் கோட்டை கட்ட பயன்படுத்தப்பட்டன. கோயிலின் நுழைவாயில் உள்ள ஐந்து அடுக்கு இராஜகோபுரமானது 110 அடி (34 m) உயரமானது ஆகும். கருவறையில் 4 அடி (1.2 m) உயரத்தில் கருங்கல்லால் அமைக்கபட்ட வெங்கடாசலபதி சிலை வடிவில் உள்ளார். இவர் நான்கு கைகளைக் கொண்டுள்ளார். இவரது பின்னிரு கைகள் சங்கு மற்றும் சக்ரத்தை ஏந்தியுள்ளன. முன் வலக்கையானது அபயமுத்திரையோடும், இடக்கையானது கடஹஸ்த முத்திரையோடும் உள்ளது. இவரது இருபுறமும் ஸ்ரீதேவியும், பூமாதேவியும் உள்ளனர். உற்சவர் சீனிவாசன் என்று அழைக்கப்படுகிறார். மேலும் உற்சவரின் வடிவம் மூலவரின் அம்சங்களை ஒத்ததாக உள்ளன. அர்த்த மண்டபம் இருபுறமும் இரண்டு துவாரபாலகர்கள் உள்ளனர். மூன்றாவது வளாகத்தில் அலர்மேல்மங்கைக்கு தனி ஆலயம் உள்ளது, அதில் உற்சவர் சிலையும் உள்ளது.
கோவில் வளாகத்தில் பந்தல் மண்டபம், வாகன மண்டம், ரெங்க மண்டம், நாங்குநேரி ஜீயர் மண்டபம் என பல மண்டபங்கள் உள்ளன. பந்தல் மண்டபத் தூண்களில் புஷ்பபொய்கை, பலகை மற்றும் வரிக்கோலம் ஆகியவற்றைக் கொண்ட கட்டடக்கலை அம்சங்கள் நிறைந்து உள்ளன. திருவிழாவின்போது நடத்தப்படும் ஊஞ்சல் உற்சவத்துக்காக ஊஞ்சல் மண்டபம் அமைக்கபட்டுள்ளது. சதுர வடிவ வசந்த மண்டபமானது நவரங்க பாணியில் அமைக்கபட்டுள்ளது. வீரப்ப நாயக்க மண்டபத்தில் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த அரிய சிற்பங்கள் உள்ளன. இந்து புராணங்களின் பல்வேறு புனைவுகளைக் குறிக்கும் முழு உருவச் சிற்பங்கள் தூண்களில் நேர்த்தியான வடிக்கபட்டுள்ளன. ஜீயர் மண்டபத்தில் கேரள கோவில்களில் உள்ளதைப் போல விளக்குகளை ஏந்தியிருக்கும் பெண்களின் சிற்பங்களைக் கொண்ட பல தூண்கள் உள்ளன. திருவிழாக்களின்போது பக்தர்கள் இந்த இடத்தில் ஓய்வெடுப்பர். சொர்க்க வாசலானது யாகசலை மண்டபத்தின் மேற்கே அமைந்துள்ளது. இது வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் போது பத்து நாட்கள் மட்டுமே திறந்திருக்கும். மணிமண்டபத்தில் யானைகள், யாளிகள் போன்றவற்றுடன் ஏராளமான தூண்கள் உள்ளன. [2] 1500 களின் முற்பகுதியில் விஜயநாயகர மன்னர்களின் கலையம்சக் கலவையோடு வீரபத்திரர் வாள் மற்றும் கொம்பு போன்றவற்றோடு காணப்படுகின்றார். இதை ஒத்த வடிவில் உள்ள வீரபத்திரரின் உருவங்களானது திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் , திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் , இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் , தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயில், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், திருவைகுண்டம் வைகுண்டநாதர் கோயில், ஆவுடையார்கோயில், வைஷ்ணவ நம்பி மற்றும் திருக்குறுங்குடிவல்லி நாச்சியார் கோவில் போன்ற கோயில்களில் காணப்படுகின்றன . [3]
விழாக்கள்
இந்த கோயிலில் வைணவ பாரம்பரியத்தின் தென்கலை பிரிவின் மரபுகளைப் பின்பற்றி பஞ்சரத ஆகம முறையில் வழிபாடு செய்யப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டில் கோயில் அர்ச்சகர்கள் ஒரு நாளைக்கு ஐந்து கால பூசை செய்துவந்தனர். கோயில் பாரம்பரியத்தை கண்டிப்பாக பின்பற்றிவந்தனர் என்று கல்வெட்டுகளில் இருந்து தெரியவருகிறது. நவீன காலங்களில், கோவில் அர்சகர்கள் விழாக்களின்போதும், நாள் வழிபாட்டிலும் பூசைகளை செய்கின்றனர். கோவிலில் வாராந்திர, மாதாந்திர திங்களிருமுறை சடங்குமுறைகள் செய்யப்படுகின்றன. [4]
இந்த கோயில் ஒரு காலத்தில் ஆண்டுக்கொருமுறை தேர்த்திருவிழாவானது பதினொரு நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவின் இறுதி நாளானது தெப்போற்ச்சவத்துடன் நிறைவடைந்தது. தற்போது இந்தத் திருவிழாக்கள் கொண்டாடப்படுவதில்லை. தமிழ் மாதமான மார்கழியில் வைகுண்ட ஏகாதசியானது கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய விழாவாக மற்ற வைணவ விழாகளுடன் கொண்டப்படுகிறது. [1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 M., Rajagopalan (1993). 15 Vaishnava Temples of Tamil Nadu. Chennai, India: Govindaswamy Printers. pp. 144–154.
- ↑ "Pandaripuram, South of India". The Hindu. 20 November 2009. http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/pandaripuram-south-of-india/article51260.ece. பார்த்த நாள்: 1 November 2015.
- ↑ Branfoot, Crispin (1 June 2008). "Imperial Frontiers: Building Sacred Space in Sixteenth-Century South India". The Art Bulletin (College Art Association) 90 (2): 186. https://archive.org/details/sim_art-bulletin_2008-06_90_2/page/186.
- ↑ "Sri Venkatachalapathy temple". Dinamalar. 2014. பார்க்கப்பட்ட நாள் 31 May 2014.