காஞ்சிபுரம் வாணேசுவரர் கோயில்
காஞ்சிபுரம் வாணேசம். | |
---|---|
பெயர் | |
பெயர்: | காஞ்சிபுரம் வாணேசம். |
அமைவிடம் | |
ஊர்: | காஞ்சிபுரம் |
மாவட்டம்: | காஞ்சிபுரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | வாணேசுவரர். |
காஞ்சிபுரம் வாணேசுவரர் கோயில் (வாணேசம்) என்று அறியப்படும் இக்கோயில், காஞ்சிபுரம் சிவிஎம் அண்ணாமலை நகரிலுள்ள சிவன் கோயிலாகும். மேலும், இத்தல குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது.[1]
இறைவர், வழிபட்டோர்
- இறைவர்: வாணேசுவரர்.
- வழிபட்டோர்: வாணாசுரன்.
தல வரலாறு
வாணாசுரன் இப்பெருமானை வழிபட்டு முத்தி தரும்படி வேண்டினான். இறைவனின் திருவருளால் வாணாசூரன் கணங்களுக்கு தலைமையைப் பெற்றான் என்பது வரலாறு.[2]
தல விளக்கம்
வாணேசம், வாணன் தவத்தினுக்கு எளிவந்து சிவபிரானார் திருநடனம் செய்தனர். திருநந்திதேவரொடு வாணனும் குடமுழா முழக்கினன். பெருமானார். ஆயிரங் கைகளை அவ்வசுரனுக்கு அளித்து மேலும், அவன் விரும்பிய நெருப்புவடிவமான கோட்டையையும் மூவுலகையும் ஆளும் வல்லமையையும், அழியாத இயல்பையும் பிறவற்றையும் வழங்கினர்.
யாவரையும் அடிப்படுத்து அவ்வசுரன் ஆளும் நாளில் கயிலைக்குச் சென்று பெருமானை வணங்க ‘நினக்கு வேண்டும் வரம் யாதென’ வினவிய கயிலைநாயகர்பால் நாளும் திருக்காட்சி தர அம்மையொடும்குமரர்களோடும் என் இல்லத்தில் எழுந்தருளி இருத்தல் வேண்டும் என்றனன்.
மனக்கருத்தை முற்றுவிக்க வாயிலில் வீற்றிருக்கும் பெருமானாரைத் தோள்தினவு தீரப்போருக்கு அழைத்தனன் வாணன். பெருமான் புன்முறுவலுடன் ‘முப்பதுமுறை உன்னிடத்துத் தோற்ற கண்ணன் உபமன்னியர்பால் சிவதீக்கை பெற்று எம்மைப் பூசித்துப் பெருவலி பெற்று நின்னை வெல்லும் வலியினனாய் நின்மகள் உஷைக்கோர் பழிவருங்கால் மதிற் கொடியும் அற்றுவிழும் துன்னிமித்தத்தில் போர்க்கு வருவன்’ என்றனர்.
அங்ஙனே, உஷை (விடியற்காலை) கனாக் கண்டு நனவில் வருந்தும்போது சித்திரலேகை என்னும் தோழி தீட்டிய அரசிளங்குமரர்களுள் தன்னைக் கனவிற் கலந்தவனைக் காட்டக் கண்டு கண்ணபிரான் பெயரனும் பிரத்தியும்நன் மகனுமான அநிருத்தனைத் துயிலும் அணையொடும் கொணர்ந்தனள் தோழி. அந்தப்புரத்தில் அவனொடும் இருந்த உஷை கருவுற்றமை அறிந்த வாணன் அநிருத்தனை அரிதிற் சிறைப்படுத்தினன்.
அநிருத்தன் சிறைப்பட்டமை நாரதரால் அறிந்த கண்ணன் சோணிதபுரத்தின்மேற் படையெடுத்துழி வாயிலில் காவல்கொண்டிருந்த சிவபிரானார் பல்வகையாகத் தேற்றி என்னையும் வெல்லும் ஆற்றலை முன்னொருகால் மந்தரமலையில் வழங்கியுள்ளோம் அதனை மறந்தனை’ ஏனத் துவாரகை மன்னனைத் தெருட்ட வேறு வழியின்மையால் எதிர்நின்று போர்செய்கையில் கண்ணனுக்கு வெற்றியை வழங்கினர்.
இவ்வாறே உமையம்மையார், விநாயகர், முருகப்பெருமானார் இருந்த ஏனைய மூன்று வாயில்களையும் கடந்தபோது வாணன் கண்ணனுடன் போர்செய்து முடிவில் தொளாயிரத்துத் தொண்ணூற்றாறு கரங்களை அறுபட்டிழந்துழிச் சிவபெருமான் எதிரெழுந்தருளிக் ‘கண்ணனே நின்போல் என்பால் அன்பனாகிய வாணன் நம்மை வழிபட இரு கரங்களை விடுக’ என அருளினர். கேட்ட கண்ணன் ‘நும் அன்பர் எனக்கும் அன்பரேயாவர்’ என நாற்கரம் விடுத்தனர்.
சிவபிரான் புன்முறுவல் பூத்து வாணனை நோக்கி ‘தோள் தினவு தீர்ந்தது போலும்’ என வினவி உஷையை அநிருத்தனுக்கு மணம் புரிவித்துத் துவாரகைக் கனுப்பினர். வாணனுக்குக் குடமுழா முழக்கும் பேறு அளித்துக் கைலைக்கேகினர் பெருமானார். இத்தலம் திருவோணகாந்தன் தளிக்கு மேற்கில் ஒரு பர்லாங்கு தொலைவில் வயற்கண் உள்ளது.[3]
அமைவிடம்
தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் வடமேற்கு பகுதியில், காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் உள்ள சி.வி.எம் அண்ணாமலை நகரில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடமேற்கில் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[4]
மேற்கோள்கள்
- ↑ Project Madurai, 1998-2008 | சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 | 40. வாேணசப் படலம் 1351 - 1461
- ↑ "shaivam.org | வாணேசம் (வாணேசுவரர்) | தல வரலாறு". Archived from the original on 2015-05-02. பார்க்கப்பட்ட நாள் 2016-02-29.
- ↑ Tamilvu.org | திருத்தல விளக்கம் | வாணேசம் | பக்கம்: 822 - 823
- ↑ "shaivam.org | காஞ்சி சிவத் தலங்கள் | வாணேசம்". Archived from the original on 2015-05-02. பார்க்கப்பட்ட நாள் 2016-02-29.