காஞ்சிபுரம் மாண்டகன்னீசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
காஞ்சிபுரம் மாண்டகன்னீசம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் மாண்டகன்னீசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:மாண்டகன்னீஸ்வரர், மாண்டுகன்னீஸ்வரர்.
தீர்த்தம்:ஐயரம்பையர் தீர்த்தம்.

காஞ்சிபுரம் மாண்டகன்னீசுவரர் கோயில் (மாண்டகன்னீசம்) என்றழைக்கப்படும் இது, காஞ்சியிலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும். மேலும், காமாட்சி அம்மன் தபசு செய்யும் இடமாக அறியப்பட்ட இக்கோவில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]

இறைவர், வழிபட்டோர்

  • இறைவர்: மாண்டகன்னீஸ்வரர், மாண்டுகன்னீஸ்வரர்.
  • தீர்த்தம்: ஐயரம்பையர் தீர்த்தம்.
  • வழிபட்டோர்: மாண்டகன்னி முனிவர்.

தல வரலாறு

மாண்டகன்னி முனிவர் காஞ்சியில் தம் பெயரில் சிவலிங்கம் பிரதிட்டை செய்து வழிபட்டு தேவமகளிர் ஐவருடனும் இம்மண்ணுலகில் போகத்தை நன்கு அனுபவித்து, அதன்பின்பு வெறுப்புற்று, இறுதியில் முத்திப்பேற்றை அடைந்தார். மேலும், மாண்டுகன்னி முனிவர் அம்மையில் தேவருலகில் அரம்பையரோடு வாழும்பகத்தை இம்மையில் இப்பிறப்பிற்றானே அவ்வரம் பையரோடு கூடி அனுபவிக்க வேண்டி பூஜித்த தலம் என்பது வரலாறு.[2]

தல விளக்கம்

மாண்டகன்னீசம் எனும் இது, அழகிய காதர் என்னும் பொருள் தரும் மாண்ட கன்னி முனிவர் ‘மாண்ட கன்னீசர்’ எனப் பெரிய சிவலிங்கம் நிறுவிப் போற்றித் திருவருள் வலத்தால் விண்ணுலகத்தில் வைத்து நுகரவேண்டிய தேவபோகத்தை இந்திரனும் (போகியும்) நாணுமாறு இக்காஞ்சியில் ஐந்து அரம்பையரைக் கொணர்ந்து மணந்து நுகர்ந்து வாழ்ந்தனர். அவர் நாளும் நீராடிய நீர்நிலை ‘ஐயரம்பையர் தீர்த்தம்’ என்றானது. முனிவர் நெடுங்காலம் போகம் நுகர்ந்து உவர்த்து முடிவில் முத்தியைப் பெற்றனர்.[3]

தல பதிகம்

  • பாடல்: (1) (மாண்ட கன்னீச வரலாறு)
மன்னுமெய்க் கிளவிக் கரிமுகன் தென்பால் மாண்டகன்னீசனை
வழுத்திக்,கன்னிஓர் பாகன் அருளினான் மாண்ட கன்னிமா முனிவரன்
என்பான், மின்னிடைக் கடவுள் மடந்தையர் ஐவர் வீங்கிள வனமுலை
திளைத்துப், பொன்னுல கிடத்தின் நுகர்பெரும் போகம் புவிமிசை
இருந்தவா நுகர்ந்தான்.
  • பொழிப்புரை: (1)
நிலைபெறும் சத்தியமொழி விநாயகர் இருக்கைக்குத் தெற்கில் மாண்ட
கன்னீசனைத் துதி செய்து உமையொரு கூறனாகிய அப்பிரான் அருளினால்
மாண்ட கன்னி முனிவரன் மின்னை ஒக்கும் இடையினையுடைய தேவ
மகளிர் ஐவர்தம் பெருத்த இளைய அழகிய கொங்கைப் பெரும் போகத்தை
விண்ணுலகினை விடுத்து மண்ணுலகில் இருந்தவாறே நுகர்ந்தனன்.
  • பாடல்: (2)
மதமலம் அறுக்குஞ் சகோதரத் தடநீர் வரைப்பிடை வளாகம்ஒன்
றியற்றி, அதனிடை இனிது வீற்றிருந் தரம்பை அந்நலார் இளமுலைப்
போகஞ், சதமகன் சமழ்ப்ப நுகர்ந்தனன் நெடுநாள் கடைமுறை
முத்தியிற் சார்ந்தான், சிதர்அரித் தடங்கண் ஐயரம் பையர்தந்
தீர்த்தம்என் றுரைப்பதத் தடமே.
  • பொழிப்புரை: (2)
செருக்குதற்கு ஏதுவாகிய ஆணவ மலவலியை மூழ்கினர்க்குக்
கெடுக்கும் சகோதர தீர்த்தத்தின் பாங்கர் இடம் ஒன்றை யமைத்துக்
கொண்டு அதன்கண் இனி திருந் தழகிய அரம்பையராகிய நன்மகளிர்
போகத்தை இந்திரனும் நாணும்படி நெடுங்காலம் அனுபவித்துப் பின்
வெறுத்து முடிவில் முத்தியைத் தலைப்பட்டனர் மாண்டகன்னி முனிவரர்.
அத்தீர்த்தமே செவ்வரி பரவிய அகன்ற கண்களையுடைய ஐயரம் பையர்
தீர்த்தம் எனப் பேசப்பெறும்.
  • பாடல்: (3)
வரிவிழி சேப்பக் குடமுலை மதர்ப்ப வால்வளை கறங்
கவண்டிமிருந், தெரிமலர்க் கூழைத் தையலார் குடையுந் தெண்புனல்
தடம்அதன் குலைமேல், எரியலர் குடங்கை மாண்டகன் னீசன்
இனிதமர் இருக்கையின் குடசார், அரில்அறுத் தருள்வன் னீசம்
ஒன் றுண்டால் அதுவருங் காரணங் கேண்மின்.
  • பொழிப்புரை: (3)
செவ்வரி பொருந்திய கண்கள் சிவப்பவும், பொற்குடத்தை ஒத்த
கொங்கைகள் விம்மவும், வெள்ளிய வளைகள் ஒலிக்கவும், வண்டுகள்
ஒலிக்கின்ற ஆராய்ந்த மலரணிந்த கூந்தலையுடைய அழகிய மகளிர்
மூழ்குகின்ற தெளிந்த நீரையுடைய தடாகத்தின் கரைமேல் மழுவை
அகங்கையிற் கொண்ட மாண்ட கன்னீசப் பெருமான் இனிதெழுந்
தருளியுள்ள தலத்திற்கு மேற்கில் குற்றம் நீக்கி அருள் புரியும் வன்னீசம்
என்றோர் தலம் உளது. அப்பெருமான் வரலாற்றினையும் கேளுங்கள்
மாதவத்தீர்![4]

அமைவிடம்

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் மேற்குப் பகுதியில் ஒக்கப்பிறத்தான் குளத்திற்கு கீழ்ப்பக்கம், மாண்டுகண்ணீஸ்வரர் கோவில் தெருவில், இக்கோவில் தாபிக்கப்பட்டள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் மேற்கு திசையில், கச்சபேசுவரர் கோயிலின் வடமேற்கு திசையில் கிழக்கு பார்த்த சன்னதியாக இக்கோவில் அமைந்துள்ளது.[5]

மேற்கோள்கள்

  1. projectmadurai.org | காஞ்சிப் புராணம் பாகம் 1b | 23. சேகாதர தீர்த்தப் படலம் (902 - 911) | 903 மாண்ட கன்னசீ வரலாறு.
  2. "shaivam.org | (மாண்டகன்னீசம்) மாண்டகன்னீஸ்வரர்". Archived from the original on 2015-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-03-11.
  3. tamilvu.org | காஞ்சிப் புராணம் | திருத்தல விளக்கம் | மாண்டகன்னீசம் | பக்கம்: 818.
  4. tamilvu.org | காஞ்சிப் புராணம் | சகோதர தீர்த்தப் படலம் | மாண்ட கன்னீச வரலாறு | பாடல் 2/3/4 | பக்கம்: 278
  5. "palsuvai.ne | காஞ்சிபுர சிவலிங்கங்கள் | 52. 68. ஸ்ரீ மாண்டு கண்ணீஸ்வரர்". Archived from the original on 2016-06-29. பார்க்கப்பட்ட நாள் 2016-03-11.

புற இணைப்புகள்

வார்ப்புரு:காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்