காஞ்சிபுரம் பிரமபுரீசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
காஞ்சிபுரம் பிரமபுரீசுவரர் கோயில் - (சிவாத்தானம்)
படிமம்:Prammapureesvarar Temple.JPG
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் பிரமபுரீசுவரர் கோயில் - (சிவாத்தானம்)
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பிரமபுரீசுவரர்.

காஞ்சிபுரம் பிரமபுரீசுவரர் கோயில் (சிவாத்தானம்) என்று அறியப்படும் இது காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும். மேலும் பிரமனின் சிவ வழிபாட்டை ஏற்று, இவ்விறைவன் உமாதேவியுடன் காட்சி தந்தருளிய இக்கோயில் பற்றிய குறிப்புகள் காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகின்றன.[1]

இறைவர், வழிபட்டோர்

  • இறைவர்: பிரமபுரீஸ்வரர்.
  • வழிபட்டோர்: பிரமன்[2]

தல வரலாறு

பிரம்மாவின் விருப்பத்தின்படி இறைவன் இவ்விடத்தை தமக்கு ஆஸ்தானமாக ஏற்றுக்கொண்டமையால், இக்கோயில் சிவாத்தானம் எனப் பெயர்பெற்றது.[3]

தல விளக்கம்

சிவாத்தானம், எனும் தல விளக்கப்படி பிரமன் திருமாலொடு உலகைப் படைக்கும் ஆற்றலை வேண்டிக் கயிலைப் பெருமானார் ஆணைப்படி புண்ணிய கோடீசத்திற்குக் கிழக்கில் ‘தேனம்பாக்கம்’ என்னும் இடத்தில் பிரம தீர்த்தம் தொட்டுக் கரையில் சிவலிங்கம் தாபித்துப் போற்றினன். பின்பு சோமயாகம் தொடங்குகையில் தேவர் முனிவர் சூழ்ந்திருக்கும்போது சரசுவதி நீரினும், பின்பு மரங்களினும் சூக்குமவடிவிற் கரந்தனள். மனைவியாகிய சரசுவதியைக் காணாது சாவித்திரி காயத்திரி ஆம் மற்றைய இரு மனைவியரொடும் பிரமன் யாகம் செய்தனன். பிரமனைக் கண்டு வெகுண்ட சரசுவதி ஆறுருவாய் யாகத்தை அழிக்க வருகையில், வேள்வித் தலைவராகிய சிவபெருமானார் வேள்வி வடிவினராகிய திருமாலை ஏவ அவர் மூன்று முறை கிடந்து தடுத்துக் கடலை நோக்கிச் செலவிட்டனர். சிவபிரானார் தோன்றி, ‘திருமாலே, நீ யாம் சொன்ன வண்ணம் செய்தமையின், ‘சொன்ன வண்ணம் செய்தவன்’ எனவும், இரவிருளில் நதியைக் காணவேண்டி விளக்கொளியாய் நின்றமையின், ‘விளக்கொளிப் பெருமாள்’ என்னும் பெயர் பெற்று எவரையும் இன்புறுத்துக’ எனவும் அருளி மறைந்தனர்.

ஆறுருவம் மாறி மீண்டும் மரவடிவில் மறைந்த சரசுவதியை அம்மரத்திற் றண்டுகொண்டு இருத்துவிக்குக்களால் வேறு பிரித்து உருவுகொண்ட அவளுடன் யாகத்தை செய்து முடித்தனன் பிரமன். காட்சி வழங்கிய அம்மை அப்பர் திருவடிகளை வணங்கி இத்தீர்த்தத்தில் மூழ்கினவரும், இவ்விலிங்கத்தை வழிபட்டவரும் முத்தியை அடையவும், தன்னுடைய இருக்கையாகிய அத்தானத்தைச் சிவபிரானுக்கு வழங்கினமையின் சிவாத்தானமென வழங்கவும் வரம் பெற்றனன். மேலும், திருமாலையும் உலகங்களையும் படைக்கும் ஆற்றலையும் பெற்றனன்.[4]

அமைவிடம்

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தில் விஷ்ணுகாஞ்சி என்றழைக்கப்படும், சிறிய காஞ்சிபுரத்தின் தென்கிழக்கு பிராந்திய , வரதராசபெருமாள் கோயிலின் தென்திசையில் தேனம்பாக்கம் செல்லும் சாலையில் வேகவதி ஆற்றின் தென்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்துநிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் சுமார் 5-வது கிலோமீட்டர் தொலைவில் காஞ்சியின் கிழக்கு நுழைவாயில் எனப்படும், டோல்கேட் பகுதியிலிருந்து 1½ கிலோமீட்டர் தெற்கே சென்றால் இக்கோயிலை அடையலாம்.[5]

மேற்கோள்கள்

  1. projectmadurai.org|திருவாவடுதுறை|யாதீனம் சிவஞான சுவாமிகள் அருளிய|காஞ்சிப் புராணம்|பாகம் 2|10. சிவாத்தானப்படலம் 583 - 631
  2. tamilvu.org|சிவஞான சுவாமிகள் அருளிச் செய்த-காஞ்சிப் புராணம்-சிவாத்தானப் படலம் (180-194)
  3. "shaivam.org|காஞ்சி சிவத் தலங்கள்". Archived from the original on 2014-08-26. பார்க்கப்பட்ட நாள் 2016-02-11.
  4. tamilvu.org|காஞ்சிப் புராணம்|திருத்தல விளக்கம்|பக்கம்: 807
  5. "மாலைமலர்|சிவாத்தானம் என்கிற பிரமபுரீசுவரர் திருக்கோயில்". Archived from the original on 2014-03-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-11.

புற இணைப்புகள்

வார்ப்புரு:காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்