காஞ்சிபுரம் தக்கேசுவரர் கோயில்

காஞ்சிபுரம் தக்கேசுவரர் கோயில் (தக்கேசம்) என்று அறியப்படும் இக்கோயில், காஞ்சிபுரத்திலுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். மேலும், தக்கன் என்பவன் தன் பெயரில் சிவலிங்கம் பிரதிட்டை செய்து வழிபட்டு, இறைவனை மதியாத பாவத்தினின்றும் விடுபட்டதாக இத்தல குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது.[1]

காஞ்சிபுரம் தக்கேசம்.
காஞ்சிபுரம் தக்கேசம். is located in தமிழ் நாடு
காஞ்சிபுரம் தக்கேசம்.
காஞ்சிபுரம் தக்கேசம்.
தக்கேசுவரர் கோயில், காஞ்சிபுரம், தமிழ்நாடு
புவியியல் ஆள்கூற்று:12°50′07″N 79°41′18″E / 12.835160°N 79.688210°E / 12.835160; 79.688210
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் தக்கேசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:தக்கேசுவரர்

இறைவர், வழிபட்டோர்

தல வரலாறு

இத்தல வரலாற்றின் அறியப்படுவது, சிவபெருமானை மதியாது தக்கன் செய்த வேள்வியில், திருமால் உள்ளிட்ட அனைத்த தேவர்களும் கலந்து கொண்டனர். இறைவனின் கட்டளையின்படி வீரபத்திரர் சென்று வேள்வி முழுவதையும் அழித்து, திருமால் உள்ளிட்ட அனைத்துத் தேவர்களும் தண்டிக்கப்பட்டனர். மனம் வருந்திய திருமால் உள்ளிட்ட அனைவரும் ஒன்றுகூடி தாங்கள் அடிக்கடி இவ்வாறு சிவபெருமானை மறந்து மயங்குதற்குக் காரணம் யாதென்றெண்ணி, சிவபெருமானை வேண்டி நின்றனர். இறைவன் அவர்கள் முன்தோன்றி அவர்கள் அனைவரையும் தக்கனுடன் சென்று காஞ்சியில் வழிபடுமாறு அருளினார். அவர்களும் அவ்வாறே சென்று வழிபட்டனர். என்பது தல வரலாறு.[2]

தல விளக்கம்

தக்கேசம் எனும் தல விளக்க கூற்றுப்படி, வேள்வி நாயகனான சிவபிரானை மதியாது வேள்வி வடிவினராம் திருமால் முதலியோரைக் கொண்டொரு வேள்வியைத் தொடங்கினன் தக்கன். உமையம்மையார் காணச் சென்று பழித்த தந்தையாகிய தக்கன் யாகம் பாழ்படச் சாபமிட்டுக் கயிலையை அடைந்த வழிச் சிவபிரான் தன் கூற்றில் வீரபத்திரரையும் அம்மையார் தன் கூற்றில் காளியையும் தோற்றுவித்து வேள்வியை அழிக்குமாறு செலுத்தப் பூதகணங்களுடன் போய்த் ததீசி முனிவர் நன்மொழியைக் கேளாத தக்கனையும், அவையையும் நோக்கிச் சிவபிரானுக்குரிய அவியைக் கொடுக்குமாறு தூண்டினர்.

மறுத்தமையால் பூத கணங்களைக் காவற் படுத்திய வீரபத்திரர் உள்ளே புகுந்து சூரியர் கண்களைப் பறித்தும் பற்களைத் தகர்த்தும், சந்திரனைக் காலாற்றேய்த்தும், அக்கினியின் கையையும் நாவையும் துண்டுபடுத்தியும் ஏனைத் தேவரையும் பொருந்திய தண்டங்களைச் செய்தும் செய்வித்தும் நிறுத்தினர்.

உடன்சென்ற காளியும் சரசுவதியின் கொங்கையையும், மூக்கையும் அரிந்தும் பெண்டிர்பிறரைத் தண்டித்தும் நின்றனள். அந்நிலையில் காக்க நின்ற திருமால் விடுத்த சக்கரப்படையை வீரபத்திரர் அணிந்திருந்த தலைமாலையுள் ஓர்தலை விழுங்கியது. இவ்வாறாகப் பெருமானார் அம்மையொடும் விடைமேற்றோன்றி போற்றி அடைக்கலம் புக்க விண்ணோரைக் காத்து அருள் புரிந்தனர். தக்கனை ஆட்டுத்தலையைப் பொருத்தி உயிர்பெறச் செய்தனர் பிரானார்.

பெருமான் திருமால் முதலாம் விண்ணோரை நோக்கித் தக்கன் யாகத்திற் பங்குகொண்ட பாவம்தீர எம்மைப் பூசனைபுரிவீராக. புரியுங்காறும் சூரபதுமன் முதலான அவுணர் நுமக்குப் பகைவராய் நலிவு செய்வர்’ என அருளித் திருவுருக் கரந்தனர். தக்கன் தன் மக்கள் பூசனை புரிந்த அச் சூழலை அடுத்துச் சிவலிங்கம் தாபித்துப் பூசனைபுரிந்து சிவகணத் தலைமை பெற்றனன். பூசனையை மறந்த விண்ணோர் சூரபதுமன் ஆட்சியில் துன்பக் கடலில் மூழ்கினர். பிரமனால் அறிந்த விண்ணோர் யாவரும் சிவபூசனை புரிந்து அச்சூரன் முதலானோரை முருகப்பெருமான் தொலைவு செய்தமையால் மகிழ்ந்து வாழ்ந்தனர்.[3]

அமைவிடம்

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் மேற்கு பகுதியான பிள்ளையார்பாளையம் கச்சியப்பன் தெருவில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[4]

மேற்கோள்கள்

  1. Project Madurai, 1998-2008 | சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 | 35. தக்கேசப் படலம் 1194 - 1270
  2. tamilvu.org | காஞ்சிப் புராணம் | தக்கேசப் படலம் | பக்கம்: 367 - 387
  3. Tamilvu.org|திருத்தல விளக்கம் | தக்கேசம் | பக்கம்: 825
  4. "shaivam.org | காஞ்சி சிவத் தலங்கள் | தக்கேசம்". Archived from the original on 2015-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-02-26.

புற இணைப்புகள்

வார்ப்புரு:காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்