காஞ்சிபுரம் இட்டசித்தீசுவரர் கோயில்

காஞ்சிபுரம் இட்டசித்தீசுவரர் கோயில் (இட்டசித்தீசம்) என்று அறியப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும். மேலும், இக்கோயில் தீர்த்தத்தில் கடவுளர்களும் தேவதைகளான பலரும் மூழ்கி பேறு பெற்றுள்ள. இக்கோயில் பற்றிய குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது.[1]

காஞ்சிபுரம் இட்டசித்தீசம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் இட்டசித்தீசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:இஷ்டசித்தீஸ்வரர்.

இறைவர், வழிபட்டோர்

தல வரலாறு

இத்தல வரலாற்றின் கூற்றுப்படி, தங்களுக்குள் யார் சிறந்தவர் - அந்தணரா? அரசரா? என்று ததீச முனிவரும் அவர்தம் நண்பருமான குபன் என்னும் அரசனும் மாறுபட்டக் கருத்துக்கொண்டு போர் புரிந்தனர். அரசனாகிய குபன் ததீச முனிவரை வெட்டிவீழ்த்தினான். ததீச முனிவர் வீழ்ந்து இறக்கும் தருவாயில் சுக்கிரனை நினைத்து வணங்கினார். அப்போது சுக்கிரர் அவரை உயிருடன் எழுப்பி அழிவுறாத நிலையை அடைய காஞ்சியில் இட்டசித்தீசத் தீர்த்தத்தில் மூழ்கிச் சிவனை வழிபடுமாறு அறிவுரை கூறி, அத்தீர்த்தத்தின் பெருமைகளையும் விளம்பினார். ததீச முனிவரும் அவ்வாறே செய்து என்றும் அழிவுறாத வச்சிர யாக்கையைப் பெற்றுக் குபனை அழித்தார்.[2]

தல சிறப்பு

இட்ட சித்தி தீர்த்தத்தில் நீராடி, பின் ஒரு புது மண் சட்டியில் மாவிளக்கு மாவு போல் வைத்து பின் அதன் நடுவில் அகல் தீபம் ஏற்றி வைத்து, பின் அதற்கு நைவேத்தியப் பொருள்கள் சமர்ப்பித்து, பின் தலையில் சுமந்துகொண்டு கோயிலை வலம் வருவார்களாம். இதனால் சிரவலி, செவிவலி, கண்ணில் ஏற்படும் பிணிகள் எல்லாம் நீங்குவதாகவும். மேலும், வடக்கில் தருமதீர்த்தம், கிழக்கில் அர்த்த தீர்த்தம், தெற்கில் காம தீர்த்தம், மேற்கில் முத்தி தீர்த்தம் ஆகிய நான்கு தீர்த்தங்களையும் தன்னுள்ளே கொண்டுள்ள இத்தீர்த்தத்தில் ஞாயிறு / கார்த்திகை ஞாயிறு ஆகிய நாள்களில் நீராடுவது மிகவும் சிறப்புடையதாகும்.[3]

தல விளக்கம்

இட்ட சித்தீச்சரம் எனப்படுவது, பிருகு முனிவர் மரபின் வந்த ததீசி முனிவர் குபன் என்னும் அரசனொடு நட்புப் பூண்டு அளவளாவு நாளில் அந்தணர் சிறப்புடையரோ? அரசர் சிறப்புடையரோ என விளையாட்டு விருப்பினராய் அசதியாடினர். அந்தணரைப் பாராட்டினர் முனிவர். அரசரைப் போற்றினர் அரசர். சொற்போர் முதிர்ந்து மற்போராயது, முனிவர் வெகுண்டு அரசனைத் தாக்க, அரசன் சினந்து வச்சிராயுதத்தால் முனிவரை இருகூறுபட வெட்டி வீழ்த்தினான். முனிவர் சுக்கிரனை மனங்கொண்டு தரையில் உருண்டனர்.

சுக்கிரன் உணர்ந்து போந்து உடலைப் பிணைத்து ததீசியை உயிர்ப்பித்தனன். உயிர்பெற்ற ததீசியை நோக்கி ‘இறைவனை வழிபடின் எங்கும் எவரானும் அழிவுறாத யாக்கையைப் பெறல் கூடும். வழிபாட்டிற்குரிய சிறந்த இடம் காஞ்சியே ஆகும். அங்கு, இட்ட சித்தீசப் பெருமானை வணங்கியே மிருதசஞ்சீவினி என்னும் இறந்தோரை உயிர்பெறச் செய்யும் மந்திரத்தைப் பெற்றேன். அந்த இட்ட சித்தீசப் பெருமானுக்கு தென்பால் இட்டசித்தித் தீர்த்தம் உள்ளது, காணினும், கேட்பினும், கருதினும், தீண்டினும், மூழ்கினும் நாற்பொருளையும் பயக்கும் அத்தீர்த்தத்தின் சிறப்பைக் கூறவும் கூடுமோ? அத்தீர்த்தத்தால் பெறாத பேறொன்றில்லை. முதல் யுகத்தில் பிரமன் மனைவியொடும் மூழ்கிச் சத்தியலோகப் பதவியையும் படைத்தற்றொழிலையும் பெற்றனன். இரண்டாம் யுகத்தில் சூரியன் மூழ்கி வேத வடிவமாம் உடலையும் ஆயிரங் கிரணங்களையும் பெற்றனன். துவாபரத்தில் திருமால் இலக்குமியொடும் முழுகிக் காத்தற் றொழிலையும் வைகுந்த வாழ்க்கையையும் பெற்றார்.

கலியுகத்தில் உமையம்மையார் முழுகி இறைவனது திருமேனியில் இடப்பாதியிற் கலந்தனர். சூரியன், பகன் என்பவர் முழுகித் தக்கன் வேள்வியில் இழந்த பற்களையும் கண்களையும் முறையே பெற்றனர். குபேரன் அம்மையை நோக்கி இழந்த கண்ணையும் இறைவனுக்கு நண்பன் ஆதலையும் அத்தீர்த்தத்தால் எய்தினன். துச்சருமேளன் ஊர்வசியையும் கண்ணன் புதல்வன் சாம்பன் குட்டநோய் நீக்கமும் பெற்றனர். நளனும் பஞ்ச பாண்டவரும் முழுகிப் பகையை வென்று இழந்த நாட்டைக் கைப்பற்றினர். இத்தீர்த்தத்தில் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்னும் நாற்றிசையினும் முறையே அறம், பொருள், இன்பம், வீடென்னும் நாற்பொருளையும் பயக்கும் நான்கு தீர்த்தங்கள் அடங்கியுள்ளன. எல்லா மாதங்களிலும் முழுகுதல் சிறப்புடையதாயினும் வைகாசி, மாசி, கார்த்திகை, ஆடி போன்ற தமிழ் மாதங்களில் மூழ்குதல் முறையே ஒன்றற்கொன் றேற்றமுடையவாகும். கார்த்திகை மாதத்து ஞாயிறு சாலச் சிறப்புடையதாகும். முழுகுதல், மந்திரம் கணித்தல் இவைகளை அங்குச் செயின் ஒன்று பலவாகும். இவ்வாறு விவரித்துக் கூறிய சுக்கிரன் ததீசிக்கு மிருத சஞ்சீவினி மந்திரத்தையும் (மாண்டவர் மீண்டுவர மந்திரம்) செவி அறிவுறுத்தனர்.

பின்பு, ததீசி முனிவர் காஞ்சியை அடைந்து இட்டசித்தித் தீர்த்தத்தில் முழுகி இட்டசித்தீசரைப் போற்றப் பெருமான் எழுந்தருளி வந்து யாண்டுங் கொலையுறாதவச்சிரயாக்கையைத் தந்தருளப்பெற்றனர். பின்பு, முனிவர் அரசவையைச் சார்ந்து குபன் என்னும் அரசனைத் தலைமேல் உதைத்தனர்; அரசனுக்கு உதவவந்த திருமாலைப் புறங்கண்டனர். இத்தலமும் தீர்த்தமும் கச்சபேசர் திருக்கோயிலில் உள்ளன.[4]

அமைவிடம்

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் நடுப்பகுதியான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவ காஞ்சியின் அன்னை இந்திராகாந்தி சாலையில் (நெல்லுக்காரத் தெரு) என்றழைக்கப்படும் இத்தெருவின் மேற்கு கடைக்கோடியிலும், மேலான்டை இராசவீதி என்றழைக்கப்படும் (மேற்கு இராசவீதி) தென்கோடியில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்துநிலையத்தின் அருகில் காஞ்சி கச்சப்பேசுவரர் கோயிலின் உட்புற குளக்கரையில் இத்தலம் தனியாக தாபிக்கப்பட்டுள்ளது.[5]

மேற்கோள்கள்

  1. Project Madurai, 1998-2008|சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2|21. இட்ட சித்தீசப் படலம் 864 - 888
  2. tamilvu.org|காஞ்சிப் புராணம்|அரிசாப பயந்தீர்த்த தானப் படலம்|பக்கம்: 266 - 273
  3. sify.com|சூரியனின் கோயில்கள்|இட்டசித்தி தீர்த்தம்[தொடர்பிழந்த இணைப்பு]
  4. tamilvu.org|காஞ்சிப் புராணம்|திருத்தல விளக்கம்|இட்ட சித்தீச்சரம்|பக்கம்: 812 - 813
  5. "shaivam.org|காஞ்சி சிவத் தலங்கள்|இஷ்டசித்தீசம்". Archived from the original on 2015-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-02-20.

புற இணைப்புகள்

வார்ப்புரு:காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்