காஞ்சிபுரம் அரிசாபபயம் தீர்த்த ஈசுவரர் கோயில்
காஞ்சிபுரம் அரிசாப பயந்தீர்த்ததானம். | |
---|---|
பெயர் | |
பெயர்: | காஞ்சிபுரம் அரிசாப பயந்தீர்த்ததானம். |
அமைவிடம் | |
ஊர்: | காஞ்சிபுரம் |
மாவட்டம்: | காஞ்சிபுரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | அரிசாபபயம் தீர்த்த ஈசுவரர். |
காஞ்சிபுரம் அரிசாபபயம் தீர்த்த ஈசுவரர் கோயில் (அரிசாப பயந்தீர்த்ததானம்) என அறியப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும். மேலும் மூலவர் சிவலிங்க மூர்த்தம் - எதிரில் நந்தியுள்ள. இக்கோயில் பற்றிய குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது.[1]
இறைவர், வழிபட்டோர்
- இறைவர்: அரிசாபபயம் தீர்த்த ஈசுவரர்.
- வழிபட்டோர்: தேவர்கள்.
தல வரலாறு
ஒருமுறை, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடந்த போரில் தேவர்களுக்கு துணையாக இருந்த திருமால் அசுரர்களை அழித்து வருவதைக் கண்ட அசுரர்கள் பயந்து ஓடி, பிருகு முனிவரின் மனைவியும், லட்சுமிதேவியின் தாயுமான கியாதியிடத்தில் தஞ்சம் புகுந்தனர். இதையறிந்த திருமால் சினங்கொண்டு, தன் மாமியார் என்றும் பாராது கியாதியின் தலையைத் துண்டித்தார். இதைக்கண்ட பிருகு முனிவர் சினமுற்று, பத்துப் பிறப்புகள் எடுத்து இவ்வுலகில் உழலுமாறு திருமாலை சபித்தார். மேலும், பிருகு முனிவர் சுக்கிரன் உதவி கொண்டு கியாதியை உயிர்பெறச் செய்தார். திருமால் மனம் வருந்தி, காஞ்சிக்கு வந்து இவ்விறைவனை வழிபட்டுப் பரிகாரம் வேண்டி நின்றார். இறைவனும் திருமாலுக்கு பிருகு முனிவர் சபித்த அப்பத்து பிறப்புக்களும் உலகத்திற்கு உபகாரமாக ஆகுமாறு அருள்செய்து, பிருகு முனிவரின் சாபத்தினால் ஹரி அடைந்த பயத்தைப் போக்கியருளினார். இதனாலேயே இம்மூர்த்தி "அரிசாப பயம் தீர்த்த பெருமான்" எனத் திருநாமம் கொண்டு விளங்குகிறார். [2]
தல விளக்கம்
அரிசாப பயந்தீர்த்த தானமென்பது, தேவரும் அசுரரும் போர் புரிகையில் தேவர்க்குத் துணையாக வந்த திருமால் அசுரரைத் தாக்கினர். புறங்கொடுத்தோடிய அசுரர் பிருகு முனிவரர் தம் மனைவியாகிய கியாதியைச் சரணடைந்தனர்.
அசுரர்க்கு இடங்கொடுத்து வீட்டு வாயிலில் காவலிருந்த கியாதியை பெண்ணென்றும் தனக்கு மாமியென்றும் எண்ணாது தலையை அறுத்தனர் திருமால். கூகூ என்னும் அரற்றுக் கேட்டு யோகம் கலைந்த பிருகு முனிவர் ‘திருமாலை நோக்கிப் பெரும் பாவத்திற்குப் பாத்திரமானவனே, ‘சைவ சமயமே ஏனைச் சமயங்களிற் றலையாய சமய மென்பதும், சிவபிரானையன்றி மற்றைத் தெய்வங்களை மறந்தும் புறந்தொழாத மாண்புடையேம் என்பதும் உண்மையேயாயின் பாவத்திற்கேதுவாகிய பிறப்புப் பத்தெடுத்து உழலுக எனவும், நின்றொண்டர் புறச்சமய நூல்வழி ஒழுகி ஏகதண்டம் (இருமை அற்றது), திரிதண்டம் (வைணவ சன்னியாசிகள் கையில்தாங்கும் முக்கோல்) தாங்கித் திரிக’ எனவும் கடுஞ்சாபம் இட்டனர். பின்னர்ச் சுக்கிரன் துணைகொண்டு மனைவியை உயிர்பெறச்செய்த முனிவரர் தவவாழ்க்கையிற் றலைநின்றனர்.
திருமால் காஞ்சியை அடைந்து சிவகங்கையில் மூழ்கித் திருவேகம்பரைத் தொழுது பின்பு கச்சபேசத்திற்குக் கிழக்கில் அரிசாப பயந்தீர்த்த பிரானைத் தாபித்துப் பூசித்தவழிப் பெருமான் வெளிநின்று ‘எம்மால் தரப்படும் சாபம் எம் அடியவரால் விரும்பின் நீக்கப்படும். அவரால் தரப்படும் சாபமோ எம்மால் நீக்கப்படமாட்டாது’ என அடியவர் பெருமையை அறிவுறுத்தி அடையும் பத்துப் பிறப்புக்களையும் உலகிற்கு நலம் பயப்பனவாகவும், பிறப்பு ஐந்தனுள் மறக்கருணையும் ஐந்தனுள் மறக்கருணையும் காட்டி அருள்வதாகவும் அருள் செய்தனர் மேலும், திருமாலுக்கு வேண்டியவற்றை அருளி அவர் விருப்பப்படி வழிபடுவார்க்கு அருள் செய்ய ‘அவ்விலிங்கத்தே வீற்றிருப்பேம் என வழங்கித் திருவுருக் கரந்தனர். இத்தலம் நெல்லுக்காரத் தெருவில் (அன்னை இந்திராகாந்தி சாலையில்) உள்ளது.[3]
அமைவிடம்
தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் நடுப்பகுதியான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவ காஞ்சியின் அன்னை இந்திராகாந்தி சாலையில் (நெல்லுக்காரத் தெருவில்) இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்துநிலையத்தின் அருகில் இத்தலம் தாபிக்கப்பட்டுள்ளது.[4]
மேற்கோள்கள்
- ↑ Project Madurai, 1998-2008|சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2|20 அரிசாப பயம் தீர்த்த தானப் படலம் 840 - 863
- ↑ tamilvu.org|காஞ்சிப் புராணம்|அரிசாப பயந்தீர்த்த தானப் படலம்|பக்கம்: 258 - 266
- ↑ Tamilvu.org|காஞ்சிப் புராணம்|திருத்தல விளக்கம்|அரிசாப பயந்தீர்த்த தானம்|பக்கம்: 817
- ↑ "shaivam.org|காஞ்சி சிவத் தலங்கள்|அரிசாப பயந்தீர்த்ததானம்". Archived from the original on 2015-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-02-19.