காங்கயம்பாளையம் நட்டாற்றீசுவரர் கோயில்
காங்கயம்பாளையம் நட்டாற்றீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
இக்கோயில் ஈரோடு மாவட்டத்தில் காங்கயம்பாளையம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. [1] கடல் மட்டத்திலிருந்து சுமார் 164 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 11°16'30.7"N, 77°48'10.3"E (அதாவது, 11.275195°N, 77.802855°E) ஆகும்.
இறைவன், இறைவி
இக்கோயிலின் மூலவராக நட்டாற்றீசுவரர் உள்ளார். இங்குள்ள இறைவி நல்லநாயகி (அன்னபூரணி)ஆவார். கோயிலின் மரம் அத்தி ஆகும். கோயிலின் தீர்த்தம் காவிரி ஆகும். ஆடிப்பெருக்கு, சித்திரை முதல் நாள், திருவாதிரை உள்ளிட்ட விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன. கார்த்திகை மாதம் கடைசி வாரத்தில் இறைவனுக்கு 108 சங்காபிசேகம் நடைபெறுகிறது. அன்று நடராசப் பெருமான் பரிசலில் காவிரியாற்றில் கோயிலைச் சுற்றி வருவார். [1]
அமைப்பு
இக்கோயிலின் வளாகத்தில் உள்ள பாறை மீது தல மரம் காணப்படுகிறது. ஓங்கார வடிவில் அமைந்துள்ள இக்கோயிலைச் சுற்றி சொக்கராயன்பேட்டை முக்கூடநாதசுவாமி, சாத்தம்பூர் வல்லாளேசுவரர், காளமங்கலம் மத்தியபுரீசுவரர்,மொளசி முக்கண்ணீசுவரர் ஆகியோருக்கான நான்கு கோயில்கள் அமைந்துள்ளன. இவற்றுக்கு நடுவில் இக்கோயிலையும் சேர்த்து பஞ்சபூதத் தலங்கள் என்று கூறுகின்றனர்.மூலவர் சன்னதிக்கு இடப்புறம் இறைவியின் சன்னதி உள்ளது.இங்குள்ள முருகன் வலது காலை முன் வைத்தும் இடது காலை பின் வைத்தும் நடப்பது போன்ற நிலையில் காணப்படுகிறார். அகத்தியர் மூலவரைச் சந்திக்க வந்தபோது இவ்வாறு முருகன் வரவேற்றதாகக் கூறுவர். இடது கையில் கிளி காணப்படுகிறது. [1]