கதலிவனேஸ்வரர் கோயில், திருக்களம்பூர்

கதலிவனேஸ்வரர் கோயில், தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுக்கோட்டை - பொன்னமராவதி சாலையில், 55 கி.மீ. தொலைவில் திருக்களம்பூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

பெயர்க் காரணம்

இவ்வூர் திருக்களம்பூர் என்றும், திருக்குளம்பூர் என்றும் அழைக்கப்படுகிறது.[2] பாண்டிய மன்னன் இவ்வூர் வழியாக குதிரையில் வரும் பொழுது குதிரையின் கால் குளம்பு ஒரு கல்லில் பட்டு இரத்தம் வர ஆரம்பித்தது. அங்கு தோண்டி பார்த்தபோது சிவலிங்கம் தென்பட, அம்மன்னனால் கோயில் கட்டப்பட்டது. அதனால் இத்தலம் திருக்குளம்பூர் என அழைக்கப்படுகிறது. திருச்சுற்றில் அபூர்வ வகையைச் சேர்ந்த கதலி வாழையைக் காணலாம். இம்மரத்தின் பழங்களை யாரும் உண்பது இல்லை. அவை சுவாமிக்கு திருமுழுக்கு செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. இம்மரத்தின் அடியில் பாறைகள் இருந்தாலும் செழிப்பாக வளர்ந்து வருகிறது. இவ்வாழைக் கன்றுகளை வேறு எங்கு எடுத்துசென்று நட்டாலும் வளருவது இல்லை.[1] கதலி என்றால் வாழை என்று பொருளாகும். வாழை மரங்கள் சூழ்ந்த வனத்தில் இறைவன் இருப்பதால் கதலிவனேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். [3]

மூலவர்

இக்கோயிலின் மூலவர் கதலிவனேஸ்வரர் ஆவார். இறைவி காமாட்சி அம்மன் ஆவார். குதிரையின் காலடி படிந்த தடங்களை லிங்கத் திருமேனியில் காணலாம்.[2] தீராத நோய்களைத் தீர்த்து வைப்பவர் எனும் நம்பிக்கையால் வைத்தீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.[3]இறைவி வைத்தீஸ்வரி என்றும் அழைக்கப்படுகின்றனர்.[1]

சொக்கநாதர் சன்னதி

பாண்டிய மன்னர்கள் கட்டும் கோயில்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிற்பங்களை அமைத்தே கட்டுவார்கள். அவ்வகையில் இக்கோயிலின் திருச்சுற்றில் மீனாட்சியும் சொக்கநாதரும் தனிச் சன்னதியில் உள்ளனர். [4]

திருவிழா

தமிழ்ப்புத்தாண்டில் பால்குடம் எடுக்கும் விழா,[5] ஆடிப்பெருக்கு விழா [6] போன்ற விழாக்கள் நடைபெறுகின்றன. வைகாசி விசாகம் 10 நாட்கள், சித்திரை விழா, நவராத்திரி விழா, தைப்பூச விழா போன்ற விழாக்கள் நடைபெறுகின்றன.

திறந்திருக்கும் நேரம்

திருவனந்தல் (காலை 6.00 மணி), சிறுகாலசந்தி (காலை 7.00 மணி), காலசந்தி (காலை 9.00 மணி), உச்சிக்காலம் (நடுப்பகல் 12.00 மணி), சாயரட்சை (மாலை 6.00 மணி), அர்த்தசாமம் (இரவு 8.00 மணி) என்ற வகையில் ஆறு கால பூசைகள் இங்கு நடத்தப்பெறுகின்றன. இக்கோயில் காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 8.30 வரையிலும் திறந்திருக்கும்.[1]

மேற்கோள்கள்