ஆனையூர் ஐராவதேசுவரர் கோவில்
ஆனையூர் ஐராவதேசுவரர் கோவில் மதுரை மாவட்டம், செல்லம்பட்டி வட்டம், ஆனையூர் கிராமத்தில்[1] அமைந்துள்ள இந்து சமயக் கோவிலாகும். கட்டகருப்பன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட இவ்வூர் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இவ்வூர், மதுரையிலிருந்து 29 கி.மீ தொலைவிலும், உசிலம்பட்டியிலிருந்து 8.7 கி.மீ. தொலைவிலும், செல்லம்பட்டியிலிருந்து 7.1 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இதன் பின் குறியீடு 625017 ஆகும். கல்வெட்டுகளில் இவ்வூர் திருக்குறுமுள்ளூர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. [2] திருக்கோவனூர் என்றும் இக்கோவில் அழைக்கப்படுகிறது. [3]
கோவில் அமைப்பு
இக்கோவில் நுழைவாயில், உருளை வடிவத் தூண்கள் தாங்கும் மண்டபமாக அமைந்துள்ளது. கோவில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகியன இடம்பெற்றுள்ளன. இவை இக்கோவிலின் தொன்மையை எடுத்துக்காட்டுகின்றன. மூலவர் ஐராவதீசுவரர் என்னும் அக்னீசுவரமுடைய பரமசுவாமிகள். மூலவர் திருவக்கீசுவரமுடைய நாயனார், திருக்குறு முள்ளுர்த் தேவர் ஆகிய பெயர்களிலும் அறியப்படுகிறார். [2] ஐராவதீசுவரர் கருவறை மேற்குநோக்கி அமைந்துள்ளது. [4]கருவறை நுழைவாயிலையொட்டி இருபுறமும் துவாரபாலர்களின் சிலைகள் அமைந்துள்ளன. சித்திரை மற்றும் ஆடி மாத பிரதோச நாட்களில் மூலவர் கருவறைக்கு நேரே சூரியக் கதிர்கள் படுவது சிறப்பு. [4] மீனாட்சியம்மை தெற்கு நோக்கிய தனிக்கருவறையில் காட்சி தருகிறார். இக்கோவிலில் விநாயகர், முருகன், மகன் ரிசபன், மகள் அக்னி உடனான தவ்வை ஆகிய துணை தெய்வங்களுக்கு சன்னதிகள் உள்ளன. [4] [5] இக்கோவில் இந்து அறநிலையத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. [2]
தொன்மக்கதை
இக்கோவில் குறித்த தொன்மக்கதையில், சிவபூசை செய்த காரணத்தால், துர்வாச முனிவருக்கு ஒரு மலர் கிடைத்தது. முனிவர் இம்மலரை இந்திரனுக்கு வழங்கினார். இந்திரன், இம்மலருக்கு உரிய மரியாதை தராமல், முனிவரிடம் பெற்றுக்கொண்டவுடன், தனது ஊர்தியான ஐராவதம் என்னும் யானை மீது வைத்தான். இவ்வாறு இந்திரன் மலரை உதாசீனப்படுத்தியது துர்வாச முனிவருக்கு மிகுந்த சினத்தை ஏற்படுத்தியது. இந்திரன் தேவர்களின் தலைமைப் பதவியை இழக்க வேண்டும் என்றும் ஐராவதம் யானை இந்திரனை விட்டு நீங்கி காட்டு யானையாக வாழ வேண்டும் என்றும் சபித்தார். காட்டு யானையாக அலைந்து திரிந்த ஐராவதம் யானையின் சாபம் நீங்கிய தலம் ஆனையூர் ஐராவதேசுவரர் கோவில் ஆகும். [4][5]
கல்வெட்டுகள்
கி.பி., 9ம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 14 ஆம் நூற்றாண்டு வரை பாண்டியர், சோழர், நாயக்க அரசர்களின் கல்வெட்டு கருவூலமாக இக்கோவில் திகழ்கிறது.[6] சோழன் தலை கொண்ட வீரபாண்டியனின் (கி.பி. 939 - 960) பத்தாம் ஆட்சியாண்டு (கி.பி 956 ஆம் ஆண்டுக்) கல்வெட்டே இக்கோவிலில் கண்டறியப்பட்ட காலத்தால் பழமையான கல்வெட்டாகும் (மதுரை மாவட்டக் கல்வெட்டுகள் பக்கம் 174 - தமிழ்நாடு தொல்லியல் துறை தொடர் எண்: 326/2003 ARE 336/1961-1962) [7] கருவறை வாயில் நிலைக்கால்களில் இக்கல்வெட்டு இருபகுதியாகப் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு இவ்வூரின் பெயரை திருக்குறுமுள்ளூர் என்று பதிவு செய்துள்ளது. இக்கோவிலில் குடிகொண்டுள்ள இறைவன் திருவக்னீசுவர நாயனாரின் அருளால் இழந்த அரசைப் பெற்றதாக ( இராஜ்ஜியத்தைத் தந்தருளின நாயனார் திருக்குறுமுள்ளூர் உடையார் திருவக்னீசுவரமுடைய பரமசுவாமிகள்) இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. [8] இம்மன்னனின் காலத்தைச் சேர்ந்த நான்கு கல்வெட்டுக்கள் இக்கோவில் திருச்சுற்றில் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுள் மூன்று வட்டெழுத்துக் கல்வெட்டுகளாகும்.
கி.பி., 1011, 1012 ஆம் ஆண்டுகளில் பொறிக்கப்பட்ட முதலாம் இராஜராஜ சோழனின் மூன்று கல்வெட்டுகள்; கி.பி., 1016 , 1018, 1021 ஆம் ஆண்டுகளில் பொறிக்கப்பட்ட முதலாம் இராஜேந்திர சோழனின் மூன்று கல்வெட்டுகள் இக்கோவிலில் உள்ளன.[6] முதலாம் இராஜராஜ சோழனின் வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்று இக்கோவிலில் பொறிக்கப்பட்டுள்ளது. [8] சோழர்கள் பாண்டிய நாட்டைக் கைப்பற்றி ஆண்ட காலத்திலும் இவ்வூரின் பெயரை திருக்குறுமுள்ளூர் என்றே இக்கல்வெட்டுகள் குறிப்பிட்டுள்ளன. இவ்வூர் இராஜராஜ பாண்டிய நாட்டின், வளநாட்டுப் பிரிவுகளில் ஒன்றான மதுராந்தக வளநாட்டின், தென்கல்லக நாட்டில் இடம்பெற்றிருந்தது. [8] சடையவர்மன் சுந்தரசோழ பாண்டியனின் [7] கி.பி. 1023, 1027, 1031 ஆம் ஆண்டுக் கல்வெட்டுகளும் இக்கோவிலில் கண்டறியப்பட்டுள்ளன. கி.பி. 1023 ஆண்டுக் கல்வெட்டு இவ்வூரை “திருக்கோவிலூரான திருக்குறுமுள்ளூர்” என்று சுட்டுகிறது. பாண்டிய மன்னர்களான சடையவர்மன் சிறீ வல்லபனின் கி.பி. 1124 ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றும், முதலாம் மாறவர்மன் குலசேகரனின் கி.பி. 1310 ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றும் இக்கோவில் வளாகத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. [6] சடையவர்மன் சிறீ வல்லபனின் கல்வெட்டிலும் இவ்வூரின் பெயர் திருக்குறுமுள்ளூர் என்றே குறிப்பிடப்படுகிறது.[7][8][6]
மேற்கோள்கள்
- ↑ Anaiyur Onefivenine
- ↑ 2.0 2.1 2.2 அருள்மிகு ஆனையூர் ஐராவதேஸ்வரர் திருக்கோயில் தமிழ் இணையக் கல்விக்கழகம் பண்பாட்டுக் காட்சியகம்
- ↑ ராயர் மடத்திற்கு தானமாக வழங்கப்பட்ட ஆனையூர் தினமலர் பிப்ரவரி 16, 2016
- ↑ 4.0 4.1 4.2 4.3 அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோவில் Dinamalar கோயில்கள்
- ↑ 5.0 5.1 வைகை நதிக்கரை ஆலயங்கள் - 23 | 1,300 ஆண்டுப் பழைமை, அஞ்சனாதேவிக்கு சந்நிதி... ஆனையூர் திருக்கோயில்! சைலபதி. விகடன். ஜூன் 25, 2021
- ↑ 6.0 6.1 6.2 6.3 பாண்டிய, சோழ, நாயக்க மன்னர்களின் கல்வெட்டுக்களை தாங்கி நிற்கும் கோயில் மதுரை அருகே ஒரு வரலாறு பெட்டகம் தினமலர் அக்டோபர் 30, 2016
- ↑ 7.0 7.1 7.2 மதுரை மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி 2 சீதாராம் குருமூர்த்தி, பொதுப்பதிப்பாசிரியர். தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை, சென்னை, 2008 த.நா.அ.தொல்லியல்துறை தொடர் எண்: 326/2003 முதல் 352/2003 வரை.பக்கம் 174 - 204
- ↑ 8.0 8.1 8.2 8.3 ஆனையூர் ப.ஜெயக்குமார். தமிழ் இணையக் கல்விக்கழகம்