ஆத்தூர் காய நிர்மலேசுவரர் கோயில்
ஆத்தூர் காய நிர்மலேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
இக்கோயில் சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. [1]
இறைவன், இறைவி
இக்கோயிலின் மூலவராக காயநிர்மலேசுவரர் உள்ளார். இறைவி அகிலாண்டேசுவரி ஆவார். வசிஷ்டருக்கு ஜோதி வடிவாக இறைவன் காட்சியளித்ததால் இத்தலத்தினை அக்னித் தலம் என்று கூறுகின்றனர். பிரதோஷம், சிவராத்திரி, சோம வார விரதங்கள் உள்ளிட்ட பல விழாக்கள் நடத்தப்படுகின்றன. [1]
அமைப்பு
கிழக்கு நோக்கிய நிலையில் ஐந்து நிலை ராஜ கோபுரம் உள்ளது. முகப்பு மண்டபத்தினை அடுத்து நந்தி உள்ளது. இக்கோயிலில் பல விநாயகர்கள், பஞ்சபூதத் தலங்களில் அருளும் இறைவன், இறைவி, வள்ளி தெய்வானையுடன் முருகன், சதுர் புஜ பைரவர், அஷ் புஜ பைரவர், சுவர்ண ஆகார்ஷன பைரவர், மகாலட்சுமி, சரசுவதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, ஐயப்பன், சூரியன், சனீசுவரன், நாகர்கள் உள்ளனர். அனுமன் சன்னதியும் உள்ளது. தீபாராதனையின்போது தீபத்தின் ஒளி லிங்கத்திருமேனியின் மேல் அழகாகக் காட்சியளிக்கிறது. [1]
வரலாறு
வசிஷ்டர் இங்கு தவம் செய்தபோது பல சோதனைகளைச் சந்திக்கவேண்டியிருந்தது. பூவும் நீரும் கொண்டு சிவ பூசை செய்தால் அந்த சோதனைகளைக் கடக்கலாம் என நாரதர் கூறியதன் அடிப்படையில் வசிஷ்ட நதி என்னும் நதியை உண்டாக்கினார் வசிஷ்டர். பூசை செய்ய சரியான இடம் தேடியபோது ஒரு இடத்தில் கால் தடுக்கிடவே அங்கு ஒரு லிங்கத் திருமேனியை அவர் கண்டார். அதை வைத்து பூசை செய்ய ஆரம்பித்தபோது கால் இடறியதால் ஏற்பட்ட பின்னத்தைக் கண்டார். அவர் சற்று யோசிக்கவே அதனை வைத்து பூசை செய்யலாம் என்று ஒரு அசரீரி எழுந்தது. ஆராதனையை முடித்துப் பார்த்தபோது ஒளிப்பிழம்பு தோன்றி அதைத் தொடர்ந்து லிங்கத் திருமேனியைக் கண்டபோது அந்த பின்னம் இல்லாமல் போனதை அறிந்தார். லிங்கத்தில் இருந்த குறையை நீக்கி இறைவன் காட்சி தந்ததால் காய நிர்மலேசுவரர் என மூலவர் அழைக்கப்பட்டார். [1]