அரியலூர் கோதண்டராமசாமி கோயில்
அரியலூர் கோதண்டராமசாமி கோயில் | |
---|---|
Lua error in Module:Location_map at line 425: No value was provided for longitude. | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | அரியலூர் |
அமைவு: | அரியலூர் |
கோயில் தகவல்கள் |
அரியலூர் கோதண்டராமசாமி கோயில் (Kodandaramaswamy Temple, Ariyalur) என்பது தமிழ்நாட்டிலுள்ள அரியலூரில் அமைந்துள்ள வைணவக் கோயிலாகும். இக்கோயிலில் தசாவாதரச் சிற்பங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள பெருமாள் கோதண்டராமசாமி என அழைக்கப்படுகிறார்.
திருக்கோயில் அமைப்பு
முகப்பைக் கடந்ததும் பலிபீடம், கொடிமரம் தரிசித்து கம்பீரமாக நிற்கும் ஐந்து நிலை கோபுரத்தின் வழியே சென்று கருடனை வணங்கி முன் மண்டபத்தினுள் நுழைந்தால் மண்டபத் தூண்களில் தசாவதாரச் சிற்பங்கள் காணப்படும். இது கோதண்டராமர் கோயில் என்று சொல்லப்பட்டாலும் கருவறையில் ஶ்ரீதேவி பூதேவி உடணுறை வெங்கடாசலபதி மூலவராகவும் உற்சவராகவும் உள்ளனர். அலமேலு மங்கைத் தாயார் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறாள். கோயிலின் பெயருக்கு காரணமான கோதண்டராமர், இனியவளும் இளையவனும் உடனிருக்க அனுமன் திருப்பாதம் பணிய எழிலாகத் தோற்றமளிக்கிறார், மலர் மகளுக்கு மட்டும் தான் இராமாவதாரத்தில் இடம் உண்டு என்றாலும், இங்கே பூமகளுக்கு ஒரு சிறப்பு உண்டு. இங்கே உள்ள ராம விக்ரகம் பூமித்தாயால் சுமந்து தரப்பட்டது என்று நம்பப்படுகிறது.
தொன்மம்
பூமிக்கடியில் புதையுண்ட இக்கோவிலை பெருமாள் தூக்கி நிறுத்தினார் என்றும் ஒரு கதையுண்டு. அதற்கு எடுத்துக்காட்டாக ஆலயக்கருவறை தேர்போன்ற வடிவில் உள்ளது. ஒரே பீடத்திலமைந்த கோதண்டராமர், சீதாதேவி, இலட்சுமணன், அனுமன் சிலைகள் விக்கிரமங்கலம் எனும் ஊரில் பூமிக்கடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது. தன்னிகரில்லா தசாவதாரப் பெருமாள்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் நல்வாய்ப்பு அரியலூர் சிறீ கோதண்டராமர் திருக்கோயில் சென்றால் கிடைக்கும்.
இங்கிருக்கும் சீதை, இராமர், லட்சுமணர் மூர்த்தங்கள் ஆண்டாள், ஆழ்வாராதிகள், தும்பிக்கை ஆழ்வார், ருக்மணி, சத்தியபாமா சமேதராக தனிச்சன்னதியில் அருளும் கிருட்டிணர், அனுமன் சன்னதிகளும் அமைந்துள்ளது.
நேர்த்திக்கடன்
பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் திருமஞ்சனம் செய்தும், துளசி மாலை சார்த்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தல பெருமை
இந்த திருத்தலத்தின் சிறப்பு என்னவென்றால் "அரி இல் ஊர்" (அரி+இல்+ஊர், அரி என்பது விஷ்ணுவைக் குறிக்கும். அரி குடிகொண்ட ஊர் எனும் பொருளில் அரி+இல்+ஊர் என்பது அரியலூர் ஆனது). அதாவது அரியாகிய மகாவிஷ்ணுவின் இருப்பிடம் என்பது தான் இந்த ஊரின் பெயருக்குக் காரணம் என்கிறார் உ.வே.சாமிநாதய்யர். அவர் சிறு வயதில் வாழ்ந்ததும் தமிழ் கற்றதும் அதில் ஆர்வம் பெற்றதாக கூறப்படுகிறது. பல்லவ மன்னர்களால் பொ.ஊ. ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு சோழர் மற்றும் விஜயநகர மன்னர்களால் புதுப்பிக்கப்பட்ட ஆலயம் இது. ஆறாம் நூற்றாண்டில் கோயில் கட்டப்பட்டதாக வரலாறு சொல்கிறது.
இங்கே தன் பத்து அவதாரங்களையும் ஒருசேர மண்டபத் தூண்களில் தசாவதாரச் சிற்பங்கள் மூலமாக எழுந்தருளி இராமன் என்றென்றும் அருள்பாலிக்கும் விதமாக அமைந்துள்ளது. சிற்பங்கள் என்று நினைக்கவே இயலாதபடி ஒவ்வொன்றும் நிஜமாகவே எதிரில் இருப்பது போல் தோன்றுகின்றன. அதிலும் தூணில் இருந்தே தோன்றிய நரசிம்மரின் வடிவம்...பயத்தோடு பக்தியையும் ஒருசேர ஏற்படுத்தும்.
துர்வாசரால் சபிக்கப்பட்ட அம்பரீஷி முனிவர் பெருமாளின் பத்து அவதாரங்களையும் ஒருசேரக் கண்டாலே அவரது சாபம் நீங்கும் என்றும் துர்வாசர் சபித்தார். எனவே அம்பரீஷர் தெற்கு நோக்கிப் புறப்பட்டு அரியலூரில் வந்து கடும்தவத்தில் ஈடுபட்டார். முனிவரின் தவத்தை மெச்சிய பகவான் தசாவதாரக் கோலத்தில் காட்சி தந்து சாபவிமோசனம் அளித்தார் எனப்படுகிறது. கோதண்டராமர் கோவில் தூண்களில், இந்த தசாவதாரக் காட்சிகள் தத்ரூபமாக உள்ளன.
அவருக்கு எம்பெருமான் காட்சியருளிய தலமாக கருதப்படுகிறது. இன்றும் பறவை வடிவில் இவ்வாலய கோபுரத்தில் அமர்ந்து தேவாதி தேவனை தரிசித்து மகிழ்கிறாராம் அந்த அம்பரீஷி முனிவர். அதனை விளக்கும் விதமாக மண்டபத்தின் எதிர்ப்புறம் கோபுரத்தின் உள்வாயிலின் மேல் பறவை ஒன்றின் சிலையை வடித்து வைத்திருக்கிறார்கள்.
மேலும் பல்லவர் கால பாணியில் அமைந்த சிங்கமுகத் தூண்கள் இங்கே இருப்பது கோயிலின் காலத்தினை உணர்த்துகிறது. தேர்போன்ற அமைப்பில் இரு குதிரைகள் இழுப்பது போன்ற கருவறை மண்டப அமைப்பு முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தின் திருக்கோயில் திருத்தி அமைத்து திருப்பணி செய்யப்பட்டிருப்பதை சொல்லாமல் சொல்கிறது. கோயில் பிற்காலத்தில் ஜமீன்தாரர்களாலும் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டுள்ளது.
தல வரலாறு
பல்லவ மன்னன் ஒருவன் தான் பெற்ற வெற்றிகளால் இறுமாப்புவுடன் இருந்தான். முதியவர் ஒருவர் போரினால் பெற்ற வெற்றிக்குப் பின், எவ்வளவு துயரங்கள் நிறைந்திருக்கின்றன என்பதை அவனுக்கு எடுத்துச் சொன்னார். களத்தில் ஜெயித்த அவனுக்கு களங்கமும் சேர்ந்திருப்பதை உணர்த்தினார். உண்மை உணர்ந்த மன்னன், தன் பாவங்கள் தீர வழிகாட்ட வேண்டினான். கோதிலா குணத்துடன் வாழ்ந்து காட்டிய ராமபிரானை வணங்கச் சொன்னார் முதியவர். அப்படியே செய்தான் மன்னன். அதற்காக அவன் கட்டியதே இந்தத் திருக்கோயில் என்கிறார்கள்.
திருவிழா
வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமை, பிரம்மோத்சவம் நடைபெறும்.
தசாவதாரச் சிற்பங்கள்
கோதண்டராமசாமி கோயிலில் உள்ள தசாவதாரச் சிற்பங்கள் மிகவும் புகழ்பெற்றவையாகும். தசாவதாரங்களும் இக்கோயிலில் உள்ள தூண்களில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளன. மச்ச, கூர்ம, கல்கி, கிருஷ்ண, வராக, நரசிம்ம, பரசுராம, ராம, பலராம, வாமன என பத்து அவதாரங்களும் இக்கோயிலில் தசாவதார மண்டபத்தில் சிற்பமாக மிக நேர்த்தியாகக் காட்சியளிக்கின்றன. ஒவ்வொரு அவதாரத்தின் சிற்பங்களும் ஆறு அடி உயரத்திற்கு இருக்கின்றன. இந்த பத்து அவதாரங்களில் நரசிம்ம அவதாரமூர்த்தி, இந்த ஊர் மக்களின் முக்கிய தெய்வமாக விளங்குகிறார். இக்கோயிலில் நரசிம்ம ஜயந்தி உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.[1]
பரமபதவாசல் திறப்பு
இக்கோயிலில் பரமபதவாசல் திறப்பு விழா நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசி திருவிழாவின்போது நாச்சியார் திருக்கோலத்துக்குப் பின், அருள்மிகு கோதண்டராமசாமி, மோகினி அலங்காரத்துடன் எழுந்தருளி, திவ்யரூபதரிசனம் தருகிறார். இதைத்தொடர்ந்து, சுவாமியின் திருவீதியுலா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பின்போது கருவறையிலிருந்து புறப்படும் கோதண்டராமசாமி முன்பகுதி மண்டபத்தில் எழுந்தருளுகிறார். தொடர்ந்து, நம்மாழ்வார் பரமபதவாசல் எதிரே எழுந்தருளிய பின்னர், பரமபதவாசல் திறக்கப்படுகிறது.[2]
குடமுழுக்கு
1995க்குப் பின்னர் இக்கோயிலின் குடமுழுக்கு 28 சூன் 2017 அன்று நடைபெற்றது.[3][4]
மேற்கோள்கள்
- ↑ கு.வைத்திலிங்கம், அரியலூர் கோதண்டராமசாமி கோயில் தூண்களில் தசாவதார சிற்பங்கள், தினமணி, புத்தாண்டு சிறப்பிதழ் 2011
- ↑ அரியலூர் கோதண்டராமசாமி கோயிலில் பரமபதவாசல் திறப்பு, தினமணி, 20 செப்டம்பர் 2012
- ↑ ஜூன் 28-இல் ஸ்ரீ கோதண்டராமசாமி கோயில் கும்பாபிஷேகம், தினமணி, 26 சூன் 2017
- ↑ அரியலூர் ஸ்ரீகோதண்டராமசாமி கோயில் கும்பாபிஷேகம், தினமணி, 29 சூன் 2017
வெளி இணைப்புகள்
படத்தொகுப்பு
- Ariyalur kothandaramarkoil.jpg
ராஜகோபுரம்
- Ariyalurkothandaramar koil.jpg
விமானங்கள்
- Ariyalur nutrukkalmandapam.jpg
ஆயிரங்கால் மண்டபம்
- Ariyalur ayirankal mandapm.jpg
ஆயிரங்கால் மண்டபம் உட்புறத் தோற்றம்