அரிமளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
அரிமளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
இக்கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரிமளம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. அரி என்றால் சந்திரன் என்றும், மழ என்றால் குழந்தை என்றும் பொருள். சந்திரன், ஒரு சாபம் காரணமாக குறுகிக் கொண்டே வந்தார். அனைத்துக் கலைகளையும் இழந்த நிலையில் வில்வ மரம் அதிகமாகக் காணப்படுகின்ற அரிமளம் வந்தபோது இறைவன் தன் தலையில் சூடிக்கொள்ள, சாபம் நீங்கியது. இழந்த கலையைப் பெற்ற சந்திரன் இறைவனிடம் இவ்வூர் அரிமளம் என்று அழைக்கப்பட வேண்டும் என்று தன் ஆவலைத் தெரிவித்தார். இதனால் இவ்வூருக்கு அரிமளம் என்ற பெயர் ஏற்பட்டது. அரும்பள்ளம் என்ற சொல் மருவி அரிமளம் என்று ஆனதாகவும் கூறுவர். இங்குள்ள விளங்கியம்மன் சன்னதியில் ஏரழிஞ்சிப்பழம் இருந்தநிலையில் அதுவே நாளடைவில் அரிமளம் என ஆனதாகவும் கருதுகின்றனர். [1]
இறைவன், இறைவி
இக்கோயிலின் மூலவராக சுந்தரேசுவரர் உள்ளார். மார்ச் 19 முதல் 21ஆம் நாள் வரை சூரிய வெளிச்சம் மூலவரின் மேல் விழுகிறது.இங்குள்ள இறைவி மீனாட்சி ஆவார். [1]
வரலாறு
கந்தர்வனின் மகள் வித்யாவதி, சியாமளாதேவியைத் தன்னுடைய மகளாகக் கருதி வழிபடத் தொடங்கினாள். அவளுடைய பிரார்த்தனைப் படி சூரசேனனுக்கு மகளாகப் பிறந்தாள். பருவ வயதில் மலையத்துவஜ பாண்டியனை மணம் புரிந்தாள். அவன் குழந்தைப்பேறு இல்லாத நிலையில் இருந்தான். தன் குறையைப் போக்க ஒரு யாகம் நடத்தியபோது அந்த யாகத்தில் மூன்று வயது சிறுமியாகத் தோன்றவே அவளிடம் தன் ஆட்சிப்பொறுப்பை மன்னன் தந்தான். மீன் தன் குஞ்சுகளுக்கு கண்களால் உணவு தருவதைப் போல பக்தர்களுக்கு அவர்களுடைய நோக்கம் அறிந்து தன் கருணைக் கண்களால் அருள் செய்த வகையில் மீனாட்சி என்ற பெயரைப் பெற்றாள். கயிலாயத்தில் சிவனைக் காணும் பேறு பெற்றாள். அவளை மணம் முடிக்க சிவன் மதுரை வந்தார். திருமணத்திற்குப் பின் மதுரையை ஆளும் பொறுப்பை ஏற்றதோடு, மக்கள் விருப்பத்திற்காக அரிமளத்திலும் அருள் கொடுத்தாள். [1]
திருவிழாக்கள்
சித்திரை மாதத்தில் தெப்பத் திருவிழா இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. [1]
குடமுழுக்கு
இக்கோயிலின் குடமுழுக்கு டிசம்பர் 2018இல் நடைபெற்றது. பின்பு சுந்தரேசுவரருக்கும் மீனாட்சி அம்மனுக்கும் சிறப்பு அபிசேகம் நடைபெற்றதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை திருக்கல்யாணமும், இரவு பஞ்சமூர்த்திகளின் வீதியுலாவும் சிறப்பாக நடைபெற்றன. [2]